இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு தரவரிசை பட்டியல் வெளியானது: 200-க்கு 200 மதிப்பெண் பெற்று 15 மாணவர்கள் அசத்தல்

சென்னை: நடப்பாண்டு இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்.) மற்றும் இளநிலை உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 660 இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு இடங்களுக்கு 14,497 பேரும், 100 இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களுக்கு 3 ஆயிரம் பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 497 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளங்கள் வாயிலாக சென்று பார்க்கலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியலில் 15 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். அவர்களில் 11 பேர் மாணவிகள் ஆவர். 15 பேரில் முதல் 5 பேரின் விவரம் வருமாறு: திவ்யா (விழுப்புரம்), அபிஸ்ரீ(ஈரோடு), சூர்யா(விழுப்புரம்), அஸ்விதா(மதுரை), நவீனா(அரியலூர்). இந்த 5 பேரில் 4 மாணவிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், அசோக்பிரியன் (தர்மபுரி), ராகவி (தர்மபுரி), உதயகுமார் (ஈரோடு), பாலாஜி (தர்மபுரி), ஹரிராஜ் (ராணிப்பேட்டை) ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றுள்ளனர். இதேபோல் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களை திவ்யா (விழுப்புரம்), துர்காதேவி (அரியலூர்), அபிநயா (அரியலூர்), மனோஜ் கார்த்திக் (திருவண்ணாமலை), சற்குணபிரியா (தர்மபுரி) ஆகியோரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் கனிமொழி (கள்ளக்குறிச்சி), நந்தா (அரியலூர்), ராகவி (அரியலூர்), ஜனத்நிஷா (சேலம்), சந்தியா (நாமக்கல்) ஆகியோரும் முதல் 5 இடங்களை பெற்றிருக்கின்றனர்.

The post இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு தரவரிசை பட்டியல் வெளியானது: 200-க்கு 200 மதிப்பெண் பெற்று 15 மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: