போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை

*ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி போக்சோ சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார். 15 வழக்குகள் விசாரணை நிலையிலேயே நிலுவையில் இருக்கின்றன. இவற்றை விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

போக்சோ வழக்குகளில் போலீசாரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இதுவரையில் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள 22 வழக்குகள் மற்றும் விசாரணை நிலையில் உள்ள 96 வழக்குகளின் மீது விசாரணையை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்து வழக்குகளை விரைந்து முடித்திட போலீசார் மற்றும் வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், விசாரணையில் தேக்கம் மற்றும் சாட்சிகள் பிறசாட்சிகளாக மாறுவதன் காரணமாக பெரும்பாலான குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதை தடுத்திட போலீசார் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒரு வழக்கில் சாட்சியமளிப்பதற்காக ஒரு முழு நாளையும் செலவிட வேண்டும் என்பதற்காக சில நடைமுறைச் சிக்கல்களால் மட்டும் விசாரணை அலுவலர்கள் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. ஆனால் இனிமேல், தவறாமல் சாட்சியமளிக்க கோர்ட்டில் ஆஜராகுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

போக்சோ சட்ட வழக்குகளைப் பொறுத்தமட்டில், பெண் புலனாய்வு அதிகாரிகளால் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும். போக்சோ சட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை உடனடியாக நடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின், சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நீதிமன்ற சம்மன்களை விசாரணை அலுவலர்கள் நிராகரிக்கக் கூடாது. போக்சோ தொடர்பான வழக்குகளில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) மற்றும் படிவம் பி-யினை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினருக்கு வழங்கிட வேண்டும். இந்நேர்வில் ஆதரவு நபர் தேவை என்னும் பட்சத்தில் நியமனம் செய்துக் கொள்ள குழந்தைகள் நல குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் பாதிப்படையும் நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய தொடர் மனநல ஆலோசனை வழங்குவதுடன் கல்வியை தொடரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட சிறார் நீதி குழும உறுப்பினர்களை 6 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள சிறு வழக்குகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி போலீசாருடன் இணைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெறும், போக்சோ வழக்கிற்கு மட்டும் சாட்சிகளை போலீசார் ஆஜர்படுத்துகின்றனர். மற்ற வழக்குகளுக்கு சரிவர சாட்சிகளை ஆஜர்படுத்துவதில்லை.
இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் போக்சோ வழக்குகளுக்கு மட்டும் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றன. மற்ற வழக்குகளுக்கு தாக்கல் செய்ய கால தாமதாகிறது தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும்.இக்கூட்டத்தில் எஸ்பி கிரண் ஸ்ருதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, குழந்தைகள் நலக் குழுமம் தலைவர் வேதநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: