திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்கள் திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு, திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் அவற்றிற்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2021 – 2022 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், “சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 3.22 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் மற்றும் பொன்னப்பன் சந்தில் ரூ.19.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் என மொத்தம் ரூ.3.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வணிக வளாகங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ARP.M.காமராஜ், திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் சி.நித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்கள் திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: