அரசு பள்ளியில் ‘குட் டச் பேட் டச்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் ஈவ் டீசிங், ராகிங் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்

*போலீசார் எச்சரிக்கை

திருப்பதி : அரசு பள்ளியில் குட் டச் பேட் டச் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் ஈவ் டீசிங், ராகிங் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் எஸ்பி சுப்பாராயுடு உத்தரவின் பேரில் திருப்பதி மேற்கு மகிளா ரக்ஷக் போலீசார் தும்மல குண்டா அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குட் டச் பேட் டச், சைபர் கிரைம், ஈவ் டீசிங், ராகிங், குழந்தைத் தொழிலாளர், குழந்தை துஷ்பிரயோகம், சமூக ஊடகக் குற்றம், குழந்தை திருமணம், ஆன்லைன் கேம் ஏமாற்றுதல், அவற்றின் விளைவுகள், தடுப்பு முறைகள், போக்குவரத்து விதிகள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஆளுமை மேம்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மகிளா ரக்ஷக் போலீசார் பேசியதாவது: இன்றைய சமுதாயத்தில் சைபர் கிரைம் என்பது ஒரு தொற்றுநோய் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த சைபர் குற்றத்தால் பெரும்பாலும் படித்தவர்களே பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது. பேராசை கொண்ட சைபர் கிரிமினல்களின் வார்த்தைகளால் மயங்கி எந்த சூழ்நிலையிலும் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், ஆதார் அட்டை, பான் கார்டு விவரங்களை அந்நியர்களிடம் கொடுக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் யாரேனும் ஈவ் டீசிங், ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும். மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளவும், அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும், மாணவர் பருவத்தில் இருந்தே ஒழுக்கம் மற்றும் கல்வி கற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையும்.

குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வது குறித்த தகவல்களை உடனடியாக 100 என்ற எண்ணில் புகார் செய்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் திருப்பதி மேற்கு மகிளா ரக்ஷக் காவல் துறையினர், தும்மலகுண்டா மாவட்ட பரிஷத் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் ‘குட் டச் பேட் டச்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் ஈவ் டீசிங், ராகிங் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் appeared first on Dinakaran.

Related Stories: