சென்னை : நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய் என்று கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், கலைஞருக்கு புகழாரம் சூட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
“உன்
பிறந்தநாளுக்கும்
நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு
நீ பிறந்த நாளில்
ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே
பிள்ளையாகினாய்
நினைவு நாளில்
தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய்
குடகுமலை மழையால்
மேட்டூர் நீர்மட்டம்
உயர்வது மாதிரி
ஒவ்வோர் ஆண்டிலும்
உன் புகழ்மட்டம்
கூடிக்கொண்டே போகிறது
வணங்குகிறோம் உங்களை;
வாழ்த்துங்கள் எங்களை
நினைவிடம்
கோபாலபுரம்
சி.ஐ.டி காலனி
அஞ்சலியின்போது…” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post “நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய்”.. :கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் appeared first on Dinakaran.