×

கோவை கார் வெடிப்பு வழக்கு 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நகல் வழங்கப்பட்டது. கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 2022ல் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் உக்கடம் கோட்டைமேடு ஜமேசா முபின் (27) உடல் சிதறி இறந்தார். இந்த வழக்கு கடந்த 2023ல் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் முக்கிய குற்றவாளிகளான ஜமீல் பாஷா, முகமது உசேன், இஸ்ரத் மற்றும் சையது அப்துர் ரகுமான் உள்பட 18க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜமீல் பாஷா அரபி கல்லூரி அமைத்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை சேர்த்து தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட வைத்ததாக கூறப்பட்டது.

மேலும் ஐஎஸ் மற்றும் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் குறித்தும், கார் வெடிப்பில் உடந்தையாக செயல்பட்டவர்களிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான ஜமீல் பாஷா, முகமது உசேன், இஸ்ரத் மற்றும் அப்துர் ரகுமான் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

The post கோவை கார் வெடிப்பு வழக்கு 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Coimbatore ,Sangameswarar Temple ,Ukkadam Kotdamedu ,Dinakaran ,
× RELATED பஞ்சாபில் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை..!!