நாகப்பட்டினம்: சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்ந்து அனுமதி கிடைத்ததால் நாகை- இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 15ம்தேதி முதல் மீண்டும் துவங்கப்படுகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ‘செரியாபாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 2023 அக்டோபர் 14ம்தேதி துவங்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி அக்டோபர் 23ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் இரண்டு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் 2024 மே 13ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ஒப்பந்தம் எடுத்த தனியார் நிர்வாகம் அறிவித்தது. சட்டரீதியான அனுமதி கிடைக்காததால் மே 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் 19ம் தேதியும் கப்பல் சேவை துவங்கப்படவில்லை. சட்டரீதியான அனுமதி கிடைக்காததால் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. உரிய அனுமதி கிடைத்தவுடன் போக்குவரத்து துவங்கப்படும். முன்பதிவு செய்தவர்கள் தங்களது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று தனியார் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்ந்து கப்பல் இயக்குவதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்காக அந்த கப்பல் சென்னையில் இருந்து நேற்று மாலை நாகை துறைமுகம் வந்து சேர்ந்தது. சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் 15ம் தேதி முதல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கப்படும் என்று தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் இரு நாட்டு சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சட்டரீதியான சிக்கல்கள் தீர்ந்து அனுமதி நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல்: ஆக.15 முதல் இயக்கம் appeared first on Dinakaran.