108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆண்டாள் கோயில் தேரோட்டம்: நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வில்லிபுத்தூரில் நாளை ஆண்டாள் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி நகராட்சி சார்பில், பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூர தினத்தன்று தேரோட்டம் நடைபெறும். இதன்படி இந்தாண்டு நாளை ஆண்டாள் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், அரசுத்துறை சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வில்லிபுத்தூர் நகராட்சியின் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கூறுகையில், ‘‘தேரோட்டத்தை காண வரும் பக்தர்களுக்கு நகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் போதிய குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பயன்படுத்த நான்கு தற்காலிக கழிப்பிட வசதிகளும், மொபைல் டாய்லெட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர் வரும் பாதைகள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மணலை அப்புறப்படுத்தி சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நகர் பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறை மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான உணவு வழங்கப்படுகிறதா, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தேருக்கு பின்னால் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக அகற்றும் வகையில் இந்த முறை 20க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். தேரோட்டம் நடைபெற உள்ளதால் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு சுகாதார பணிகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

இதனிடையே தேர் சாலையில் வரும் போது பதியும் என கண்டறியப்பட்ட இடங்களில் இரும்பு பிளேட்டுகள் போட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராம்கோ நிறுவனம் சார்பில் சுமார் 80 இரும்பு பிளேட்டுகள் கொண்டுவரப்பட்டு நேற்று தேர் வரும் நான்கு ரத வீதிகளில் தேர் சாலையில் பதியும் என்று கண்டறியப்பட்ட இடங்களில் இறக்கி வைக்கப்பட்டன.

இதேபோல் தேருக்கு பிரேக் பொருத்தும் பணியில் ராம்கோ நிறுவனத்தைச் சேர்ந்த இன்ஜினியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் முடிந்த பின்னர் பிரேக்குகள் கழற்றி பாதுகாப்பாக வைக்கப்படும். மீண்டும் தேரோட்டத்தின்போது தேரில் பொருத்தப்படும். அந்த வகையில் நேற்று தேருக்கு பிரேக்குகள் பொருத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காக ராம்கோ நிறுவனத்தின் இன்ஜினியர்கள் நேற்று வில்லிபுத்தூர் வந்து தேருக்கு பிரேக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நாளை உள்ளூர் விடுமுறை
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட அறிவிப்பு: வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 30 முதல் ஆக.7 வரை நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்படும். அதை ஈடு செய்யும் வகையில் ஆக.17 வேலை நாளாக செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.

The post 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆண்டாள் கோயில் தேரோட்டம்: நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: