நானும் ராணுவத்தில் இணைந்து நாட்டைக் காப்பேன்.. வயநாட்டில் உயிரை பணையம் வைத்த ராணுவ வீரர்களை பாராட்டி சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு படைகளை மேற்கொண்டுள்ள ராணுவத்தை பாராட்டி கேரளத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் எழுதிய பாராட்டு கடிதம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 300க்கும் மேற்பட்டோரின் உயிழப்புக்கு காரணமான வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோரை இந்திய ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். இதனை கண்ட தனியார் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வரும் ரயான் என்ற சிறுவன் மலையாளத்தில் தனது மழலை மொழியில் எழுதிய கடிதத்தில்;

அன்புள்ள இந்திய ராணுவத்தினருக்கு , எனது அன்பான வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தங்களது பசியைப் போக்க பிஸ்கட் சாப்பிடும் வீடியோக்களைப் பார்த்தேன். அந்த பிஸ்கட் உங்களது பசியைப் போக்கியிருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இயங்கி உடனடியாக ராணுவ வீரர்கள் பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் ஒருநாள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாப்பேன். அதற்காக ஆசைப்படுகிறேன் என்று எழுதியுள்ளார்.

சிறுவனின் இந்தக் கடிதத்தை இந்திய ராணுவம் தெற்கு கமாண்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள இந்திய ராணுவம் இதயம் கனிந்த உன்னுடைய வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ளது. உன்னை போன்ற ஹீரோக்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் வழங்குவதற்கான ஊக்கமாக உள்ளனர் என்று கூறியுள்ள இந்திய ராணுவம், நீ சீருடை அணிந்து எங்கள் பக்கம் நிற்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.

The post நானும் ராணுவத்தில் இணைந்து நாட்டைக் காப்பேன்.. வயநாட்டில் உயிரை பணையம் வைத்த ராணுவ வீரர்களை பாராட்டி சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: