அரசு ஊக்கத்தொகையுடன் சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2,450க்கு கொள்முதல்

 

ஈரோடு, ஆக.5: தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையுடன் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.450க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2405க்கும் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ஒவ்வொரு பருவத்திலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

நெல் விவசாயிகள் நலன் கருதி காரிப் பருவத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 2023-2024 காரிப் பருவத்தில் கடந்த மாதம் வரை மாநிலம் முழுவதும் 3,200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3 லட்சத்து 85 ஆயிரத்து 943 விவசாயிகளிடமிருந்து 33 லட்சத்து 24 ஆயிரத்து 166 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2024-2025 காரிப் பருவத்திற்கு சன்ன ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2,320 மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.130 சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்ற விலையிலும், பொது ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,300 உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.105 சேர்த்து பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்ற விலையிலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.  இந்த புதிய விலை உயர்வானது கடந்த 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்

The post அரசு ஊக்கத்தொகையுடன் சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2,450க்கு கொள்முதல் appeared first on Dinakaran.

Related Stories: