ஒரு வழியா கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்தாச்சு… ஓரளவு சம்பளமும் கிடைக்குது. கொஞ்சம் சேமிப்பும் இருக்கு…. மகன், மகள் படிப்புச் செலவு, கல்யாணச் செலவு ஒரு பக்கம் இருக்கு. இதையெல்லாம் சமாளிச்சுக்கலாம்தான். இருந்தாலும், சொந்தமா ஒரு வீடு வாங்கிட்டா அக்கடான்னு நிம்மதியா இருக்கலாம். நம்ம காலத்துக்கு அப்புறம் குழந்தைகளுக்கு பயன்படத்தானே போகுது…
இது ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திலும் காணப்படும் உரையாடல்.
நடுத்தர மக்களின் கனவுகளில் மிக முக்கியமானவை, சொந்த வீடு… கார்… இதுதான். உணவு, உடை போல, வீடு அடிப்படைத் தேவை. வாழும் காலம் வரை பிக்கல் பிடுங்கள் இல்லாமல், நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக் கூடியது. ஆனால், வீடு வாங்குவது இன்று பலருக்கு கனவாகவே போய்விட்டது.இதற்கு காரணம், ரியல் எஸ்டேட் படு உச்சத்துக்கு சென்று விட்டது என்பது மட்டுமல்ல… அதற்கு இணையாக வரிகளும் அதிகமாகி விட்டது என்பதும் தான் காரணம்.
எவ்வளவுதான் பாடுபட்டு சம்பாதித்தாலும், சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தாலும் பாதிப்பணம் பண வீக்கத்திலும்,வரியிலும் கரைந்து போய்விடுகிறது. வீட்டு லோன் கேட்டு அலையும்போது ‘‘சார்… நீங்க கிட்டத்தட்ட 50 வயசை நெருங்கிட்டீங்க … வீட்டு லோன் இவ்வளவுதான் தர முடியும்… உங்களால குறுகிய காலத்துல கட்டி முடிக்க முடியுமா… யோசிச்சுங்குங்க. இஎம்ஐ சம்பளத்துல பாதியை முழுங்கிடும் என்று வங்கி அல்லது நிதி நிறுவன தரப்பில் கூறுவதை கேட்கும்போது பலருக்கும் தலை சுற்றத்தான் செய்யும்.
நிலைமை அப்படி. ஏன்னா? யோசிச்சு பார்க்கும்போதுதான், இஎம்ஐயில பாதி சம்பளம் போறது ஒரு பக்கம் இருந்தாலும்… இதுவரை வாங்கின சம்பளத்துல பாதி வரியிலேயே போச்சேன்னு நெற்றிப்பொட்டில் அடிச்சமாதிரி உறைக்கும். ஒரு சின்ன கணக்கு போட்டு பார்த்தாலே மலைப்பாத்தான் இருக்கும். அட, இன்னைக்கு சென்னை மாதிரி பெருநகரத்துல முக்கியமான இடத்துல ‘காம்பாக்ட்டா’ ஒரு ஃபிளாட் வாங்கினா கூட எப்புடியும் ஒரு கோடிம்பாங்க. அதுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி கட்டினா கூட 5 லட்ச ரூபாய் போயிடும்.
பத்திரப்பதிவுக்கு இந்தா அந்தான்னு 3 லட்சமாவது கேப்பாங்க. ஆக மொத்தம் ரூ.1.08 கோடி இருந்தால்தான் அந்த காம்பாக்ட் வீடு கூட கைவசப்படும். இல்லேன்னா கனவுதான். அட, வீடு வாங்குற செலவ விடுங்க… அந்த ஒரு கோடியை சம்பாதிக்கிறது மட்டும் அவ்வளவு சுலபமா என்ன? ஏறக்குறைய ஒன்றரை கோடி சம்பாதிச்சாத்தான், ஒரு கோடி கையில தங்கும். காரணம், வரிதான். ரூ.1.08 கோடி சம்பாதிக்க வேண்டுமானால், 30% வருமான வரிக்கே போய்விடும்.
அப்புறம் 15 சதவீதம் சர்சார்ஜ், போதாக்குறைக்கு செஸ் வரி 4%. ஆக மொத்தம் 35.88%. இதன்படி பார்த்தால் வரிக்கு மட்டும் ரூ.38.75 லட்சம் போய்விடும். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்க கட்ட வேண்டிய பத்திரப்பதிவு, ஜிஎஸ்டி சேர்த்தால் ரூ.46.75 லட்சத்தை வரி விழுங்கி விடுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மகல்வாரி முறையில் நில வருவாய் திட்டத்தில் 66 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது. தற்போது வீடு வாங்க ஆசைப்பட்டாலும், ஏறக்குறைய இதுபோல் பாதி அளவுக்கு கண்ணுக்கு தெரியாமல் வரியாக சென்று விடுவதாக நடுத்தர மக்கள் பலர் மேற்கண்டவாறு தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
* வாங்கினால் மட்டுமல்ல… விற்றாலும் வரிதான்
பிற்காலத்தில் உதவும் என்பதற்காகவே நடுத்தர மக்கள் சொத்துக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றை விற்கும்போது கிடைக்கும் லாபத்தில் நீண்ட ஆதாய வரி விதிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் இந்த வரி 12.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்துக்கு ஏற்ப ஒரு சொத்து வாங்கும்போது இருந்த பணத்தின் மதிப்புக்கும், விற்கும்போது அந்த பணத்தின் மதிப்புக்கும் உள்ள வேறுபாடு கணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் எஞ்சிய லாபத்துக்கு வரி விதிக்கப்படுகிறது.
உதாரணமாக ரூ.10 லட்சத்துக்கு ஒரு வீட்டை வாங்கி, அதனை ரூ.50 லட்சத்துக்கு விற்பதாக வைத்துக் கொள்ளலாம். வீட்டை வாங்கும்போது இருந்த ரூ.10 லட்சம் தற்போது ரூ.30 லட்சம் மதிப்பாக கணக்கிட்டால், மீதமுள்ள ரூ.20 லட்சத்துக்கு வரி செலுத்தினால் போதும். இந்த இன்டக்சேஷன் பட்ஜெட்டில் நீக்கப்பட்டு விட்டது. இதனால், அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
The post சம்பாதிக்கறதுல பாதி வரிக்கே போகுது ரூ.1 கோடிக்கு வீடு வாங்கணும்னா ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதிக்கணும்! appeared first on Dinakaran.