கோவை மாநகரில் மழை நீரை குளங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பாதிப்புகள் அதிகமாகி வருகிறது. தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து வீடு, பொது இடங்கள், ரோடு, தாழ்வான பகுதிகளில் பாய்வதால் பாதிப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டிற்கு மேலாக கோவை அரசு மருத்துவமனை வளாகம், லங்கா கார்னர் பாலம், ஸ்டேட் பாங்க் ரோடு, அரசு கலைக்கல்லூரி ரோடு, கிக்கானி பாலம், சோமசுந்தரா பாலம், சிவானந்தா காலனி பாலம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்கள் மழை நீர் பாதிப்பு நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவினாசி ரோடு மேம்பால கீழ் பகுதியில் மழை காலங்களில் முற்றிலும் போக்குவரத்து தடைபடும் சூழல் இருக்கிறது. மழை நீர், சாக்கடை நீர் சூழ்ந்து குட்டை போல் தேங்கி விடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்து போவது மழை காலங்களில் வாடிக்கையாகி விட்டது. மாநகராட்சி எல்லையில் ஆயிரம் கி.மீ தூரத்திற்கும் அதிகமாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வடிகால் அனைத்தும் சாக்கடை நீர் பாயும் வகையில் மாறி விட்டது. மழை நீர் வடிகாலில் மழை நீர் பாய்வதில்லை. மழை நீரை நீர் தேக்கங்களுக்கு கொண்டு செல்ல மாநகராட்சி முயற்சித்து வருகிறது. மாநகராட்சியில் காலம் காலமாக தீர்வு காணப்படாத வடிகால் திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.

தற்போது பருவ மழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் எப்படி அமைக்கலாம், எங்கே நீரை வெளியேற்றலாம் என ஆய்வு செய்ய ஏஜன்சியை அணுகியது கோவை மாநகராட்சி நிர்வாகம். கிழக்கு மண்டலத்தில் 68 சதுர கி.மீ தூரம், மேற்கு மண்டலத்தில் 48 சதுர கி.மீ தூரம், மத்திய மண்டலத்தில் 30 சதுர கி.மீ தூரத்திற்கு வடிகால் அமைத்து மழை நீரை நீர் தேக்கங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 3 மண்டலங்களில் 146 சதுர கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைத்து குளம் மற்றும் நொய்யல் ஆற்றுக்கு நீரை கொண்டு செல்ல மாநகராட்சி நிர்வாகம் திட்டம் தயாரித்து செயல்படுத்தி வருகிறது.

நகரில் உள்ள மழை நீர் வடிகால்கள், குளங்களுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்படவில்லை. நகரின் மைய பகுதியில் உள்ள மழை நீர் கால்வாய்கள் பள்ளத்தில் இருக்கிறது. இந்த நீரை வாலாங்குளம், பெரியகுளத்திற்கு அனுப்பும் வடிகாலில் நீர் செல்வதில்லை. மோட்டார் வைத்து நீர் உறிஞ்சி அனுப்ப வேண்டியுள்ளது. மழை நீர் வடிகால்கள் மூலமாக குளங்களுக்கு நீர் முழுமையாக அனுப்ப தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. கோவை நகரில் 9 குளங்கள் இருக்கிறது.

The post கோவை மாநகரில் மழை நீரை குளங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: