பெங்களூரு: வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்கள் நிலச்சரிவால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவு வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
கேரளா வரலாற்றில் இப்படியொரு நிலச்சரிவு என்பது ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதோடு இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. இத்தகயை சூழலில் தான் தங்களின் உறவுகளை இழந்து நிவாரண முகாம்களில் உள்ளவர்கள் அழுது புலம்பி வருகின்றனர். உறவினர்களை இழந்த துக்கம் ஒரு பக்கம் என்றால், வீடு, நிலம் என அனைத்தையும் இழந்து கையறு நிலையில் உள்ளதாகவும், எதிர்காலத்துக்கான வாழ்வாதாரம் தொடர்பான அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தான் தற்போது நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றன. வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் வயநாடு எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கர்நாடகா அரசு சார்பில் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் கேரளாவுக்கு ஆதரவாக கர்நாடகா அரசு நிற்கிறது. கர்நாடகா அரசு சார்பில் 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளேன். ஒன்றாக இணைந்து நம்பிக்கையை கட்டியெழுப்பி மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.
The post கேரளாவுக்கு தோள் கொடுக்கும் கர்நாடகா.. அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்: முதலமைச்சர் சித்தராமையா உறுதி..!! appeared first on Dinakaran.