இந்த வார விசேஷங்கள்

ஆடிப்பெருக்கு 3.8.2024 – சனிக்கிழமை

ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அமைப்பில் கொண்டாடப்படும். இந்த விழா எந்த நாள் எந்த திதியாக இருந்தாலும் ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதி பிம்பமான விழா.

உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பச்சைப் பயிர்கள் நன்கு விளையும். அந்த ஆறுகளையும் ஆறுகளில் ஓடும் நீரையும் தெய்வமாக நினைத்துக் கொண்டாடி மகிழும் நாள் ஆடிப்பெருக்கு.

ஆடியில் செய்யும் வழிபாடு கோடி பெறும். மிகப்பெரிய செல்வப் பெருக்கத்தையும், குடும்பத்தில் இன்பப் பெருக்கையும் வழங்கும். ஆடிப்பெருக்கு திருநாளன்று பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆறு கால்வாய் முதலில் நீர்நிலைகளுக்குச் சென்று, அந்த நீருக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து வாழை இலையில் படையல் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூர தூபதீபங்கள் காட்டி, புது அரிசி வெல்லம் கலந்து வைத்து. சித்ரான்னங்களைப் படைத்து, குதூகலமாகக் கொண்டாடுவது உண்டு. அன்று நீர்நிலைகளுக்கு சீர் செய்வார்கள்.

வாழை மட்டையில் அகல்விளக்குகளை ஏற்றி நீரில் விடுவதும் சில இடங்களில் நடைபெறும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அன்று தாலிக் கயிறு மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் திருமணமான பெண்களிடம் இருந்து வாங்கி மஞ்சள் சரடு அணிவதன் மூலமாக அவர்களுக்கும் மிக விரைவில் திருமணம் ஆகும்.

ஆறு, குளம் முதலியன, அருகே இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் போர் வெல் அல்லது அடிபம்பு இருந்தால் அந்தக் குழாயடியிலும் பூஜையைச் செய்யலாம். அல்லது ஒரு சிறு குடத்தில் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சளைக் கரைத்து வைத்து படைக்கலாம்.

விளக்கேற்றி வைத்து, குடத்தண்ணீரில் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்ட வேண்டும். அந்த நீரையே புண்ணிய நதிகளாக நினைத்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்த
வுடன் அந்த நதி நீரை கால் படாத வண்ணம் செடிகொடிகளுக்கு ஊற்றி விட வேண்டும்.

திருவரங்கத்தின் புகழ்பெற்ற அம்மா மண்டபம் என்கின்ற படித்துறை உள்ளது. அங்கே காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் பெரிய கோயிலில் இருந்து நம் பெருமாள் யானை மீது புறப்பாடாவார். அம்மா மண்டபம் படித்துறைக்கு வருவார். அங்கு காவிரி நீரால் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கே மாலை வரை பெருமாள் வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமான தாலிக் கயிறு, பட்டு மற்றும் மங்களப்
பொருள்கள் ஆற்றில் விடப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் 5 கருட சேவை 3.8.2024 – சனி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 5ம் நாள் திருவிழாவான இன்று 5 கருட சேவை நிகழ்ச்சி நடைெபறும். காலை 11 மணிக்கு ஆண்டாள் கோவில் முன்பு உள்ள ஆடிப்பூர மண்டபத்தில் பெரிய ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து 5 கருட சேவைக்கு ரங்க மன்னார், பெரிய பெருமாள், திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலை சீனிவாசபெருமாள், சுந்தர்ராஜ பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தோடு எழுந்தருள்வர் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத உற்சவம் இது.

ஆடி அமாவாசை 4.8.2024 – ஞாயிறு

இன்று ஆடி அமாவாசை. தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதத்தில், பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன் னோர்கள் நம்மை பார்ப்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் மாதமாக சொல்லப் படுகிறது. அதனால் ஆடி அமாவாசையில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை நம்முடைய முன்னோர்ளே நேரடியாக ஏற்பதாக ஐதீகம். அது மட்டுமல்ல, ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது, மூன்று தலைமுறை முன்னோர்கள் மட்டுமின்றி அதற்கு முந்தைய தலை முறையினரையும் சென்று சேரும்.

மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கள்ளழகர் கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். தொடந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி, வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்படும். மேலும் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சாத்தப்படும்.

திருவையாறு அப்பர் கயிலை காட்சி 4.8.2024 – ஞாயிறு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் அப்பர் பெருமானுக்குக் திருக்கயிலைக் காட்சி கொடுத்தருளல் விழா இன்று நடைபெறும்.

பிற்பகல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தீர்த்தவாரியும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அனைத்து இசைக் கலைஞர்கள் சேர்ந்திசை, வழங்க ஐயாறப்பர் கோயிலில் தென் கயிலாயம் எனப் போற்றப்படும் அப்பர் சந்நதியில் அப்பர் பெருமானுக்குச் சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெறும்.

ஆண்டாள் ரங்க மன்னார் மடி சேவை 5.8.2024 – திங்கள்

ஆடிபூரத்திருவிழாவின் ஏழாம் நாளன்று ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியதாகும்.

ஆடிப்பூரம் 7.8.2024 – புதன்

இந்த ஆண்டு ஆடிப்பூரம் பெருமாளுக்குரிய புதன்கிழமையில், திருதியை திதியில் வருவது சிறப்பு. ஆடிப்பூரம் வைணவத்தில் ஆண்டாளுக்கும் சைவத்தில் அம்பாளுக்கும் பொதுவாக அம்மனுக்கும் விசேஷ தினமாகும். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தட்சிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தி யாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல, கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள் ஆடிப்பூரம். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

ஆடிப்பூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறும். சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சந்நதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

இந்த அற்புத திருநாளில் எழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை. குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு. அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ள பெண்கள், தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் படைத்து வணங்கலாம். இளம் பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல். கூல், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

நாகசதுர்த்தி8.8.2024 – வியாழன்

ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என் றாலும் இந்தக் குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு. ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித்தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்தப் பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர்.

இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்புப் புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. தெற்கே நாகர்கோவில் என்ற ஒரு ஊர் உண்டு.

நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகுகேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப் பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம். அரச மரத்தடி, வேப்ப அல்லது ஆலமரத்தடியில் உள்ள நாகப்பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

கருட பஞ்சமி, நாக பஞ்சமி 9.8.2024 – வெள்ளி

கருட பஞ்சமி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்துகொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும். இதே நாள் நாகபஞ்சமி நாளாகவும் இருப்பதால் நாகர்களின் தலைவனான ஆதிசேஷனுக்கு பூஜை செய்வதும் நடைபெறும். எதிரெதிர் விஷயங்களான கருடன், பாம்பு இந்த இரண்டையும் ஒரே பஞ்சமி நாளில் வணங்குகின்ற பொழுது, பகை கொண்ட உள்ளங்கள் மாறும்.

நட்பு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம், குதூகலம் நிலவும். கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த தினத்தில் அவசியம் நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி பூஜைகளில் கலந்துகொள்வதால் நட்பு பலப்பட்டு கூட்டுத்தொழில் விருத்தியாகும். கருட பஞ்சமி அன்று கருடனை வணங்குவதன் மூலமாக கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் குறையும். ஐஸ்வர்யம் பெருகும். இன்று நாகபூஜை செய்து கருடனுக்கு நெய்தீபம் போடுவது நாக தோஷங்களை நீக்கும். திருமணத் தடைகளை அகற்றும்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: