×

சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக ஈடி ரெய்டு நடத்த திட்டம்: டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட்

புதுடெல்லி: தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களுக்காக டீ மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் குறித்த விவாதம் நடந்து வருகின்றது. மக்களவையில் பாஜ அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றார். திங்களன்று அவையில் பேசிய ராகுல்காந்தி, ‘‘ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அபிமன்யு 6 பேரின் சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டார். சக்கரவியூகத்தின் மற்றொரு பெயர் பத்மவியூகம். இது தாமரை மலரின் வடிவில் இருக்கின்றது. இன்றும் ஆறு பேர் கொண்ட குழுவானது முழு நாட்டையும் சக்கரவியூகத்தில் சிக்க வைப்பதன் மூலம் அச்சத்தின் சூழல் நிலவுகிறது.

இதனை இந்தியா கூட்டணி உடைக்கும்” என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தி சக்கரவியூக பேச்சுக்காக அமலாக்கத்துறை தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வெளிப்படையாக எனது சக்கரவியூக பேச்சு இரண்டு பேரில் ஒருவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அமலாக்கத்துறை சோதனைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறை சோதனைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் டீ மற்றும் பிஸ்கட்டுடனும் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாஜ அரசானது அரசியல் துன்புறுத்தலுக்காக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புக்களை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

 

The post சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக ஈடி ரெய்டு நடத்த திட்டம்: டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Rahul Dwight ,NEW DELHI ,RAKULGANDHI ,ENFORCEMENT DEPARTMENT ,Houses of Parliament ,Baja Sarasai ,People's Republic ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...