சென்னை, ஆக. 2: தனது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து 4 நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்என் ரவியின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரையில் கவர்னரின் பதவி நீட்டிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே கவர்னர் ஆர்என் ரவி, ஒன்றிய அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரையில் தமிழ்நாடு கவர்னராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே டெல்லியில் அனைத்து மாநில கவர்னர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக, கவர்னர் ஆர்என் ரவி நேற்று காலை 9.50 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். டெல்லி சென்றுள்ள கவர்னர் ரவி, கவர்னர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது. தனது 4 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, வரும் 4ம் தேதி பகல் 12.40 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் அவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் 4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ரவி appeared first on Dinakaran.