* கூடலூர் சாலையில் வாகனங்களுக்கு தடை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கூடலூர் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 10ம் தேதிக்கு மேல் துவங்கிய மழை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் குந்தா ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தன. போக்குவரத்து பாதிப்பு, மின்விநியோகம் துண்டிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மழை மற்றும் காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை (இன்று வரை) நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆனால், நேற்று பகலில் மழை குறைந்தே காணப்பட்டது. இன்றும் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளநிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டும், கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அதேபோல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீரோடை அருகில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஊட்டி – கூடலூர் சாலையில் ஆகாச பாலம் அருகே அடிக்கடி மண் சரிவு ஏற்படும் நிலையில், மழை குறையும் வரை, இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைத்துள்ளது.
நிலச்சரிவால் மலை ரயில் சேவை ரத்து
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் நேற்று காலை 7.10 மணியளவில் 184 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக அடர்லி- ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. அதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லாறு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, மேட்டுப்பாளையம் திரும்பி சென்றது. இதை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் சேவை நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் தலா 30 வீரர்கள் கொண்ட 2 குழுவினர் என மொத்தம் 60 வீரர்கள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைத்து மீட்பு கருவிகளுடன் டிரக் மூலம் 2 குழுவினர் நீலகிரி வந்தனர். அவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
The post கனமழை பெய்யும், நிலச்சரிவு அபாயம்; ஊட்டிக்கு வருவதை தவிர்க்கவும்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.