×

மாமல்லபுரம் அருகே பட்டா வழங்க தரிசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பட்டா வழங்குவதற்காக தரிசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்து, விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்தும் வீட்டு மனை பட்டா இல்லாமல் தரிசு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல முறை மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெம்மேலியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிலும் மனு கொடுத்தனர். இதையடுத்து, நேற்று மதியம் செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா பட்டிப்புலம் பகுதிக்கு நேரில் வந்து தரிசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 70 வீடுகளை திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, விரைவில் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்று சப்-கலெக்டர் நாராயணா சர்மா உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிக்குமார், திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன், பட்டிப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மாமல்லபுரம் அருகே பட்டா வழங்க தரிசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sub-Collector ,Mamallapuram ,Pattipulam panchayat ,Patta ,
× RELATED மாமல்லபுரம் அருகே பரபரப்பு காப்புக்காட்டில் திடீர் தீ விபத்து