* தொழிலாளருக்கு இலவச வீடு, கடன் வழங்க நடவடிக்கை
மதுரை: மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசின் டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த முடியாது. தோட்ட பணியாளர்களுக்கு இலவச வீடு, கடன் வழங்க தமிழக அரசு உதவி செய்யும் என ஐகோர்ட் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ரோஸ்மேரி, ஜான்கென்னடி, புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் உள்ள தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த சாத்தியமில்லை.
தமிழக அரசின் டான்டீ நிறுவனம் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே, அந்நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை. அம்பாசமுத்திரம், களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்கள் 559 பேருக்கு வாழ்வாதார வசதிகள் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். தொழிலாளர்களுக்கு வீடு, சுயதொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கவும், கலைஞர் கனவு இல்லதிட்டம் மூலம் வீடு கட்டிதர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆக.7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
The post மாஞ்சோலை எஸ்டேட்டை டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.