×

மேட்டூரில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு

* ஆற்றில் குளிக்கவும், ஆடிபெருக்குக்கு நீராடவும் தடை
* முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திருச்சி: மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சத்து 15 கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணியளவில், விநாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதே போல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, நேற்று காலை 1,70,500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 1,70,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

இங்குள்ள புதுப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் காவிரி பாலத்தில் இலகுரக வாகனங்கள், டூவீலர்களும் தடை செய்யப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தோடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர்-இடைப்பாடி சாலை மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நேற்று முன்தினம் இரவு முதல் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி திறக்கப்பட்டதால் பவானி பகுதிகளில் கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கந்தன் நகர், அந்தியூர் பிரிவு அருகே உள்ள பசுவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பவானி பாலக்கரை பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் 80க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.

பவானி நகராட்சி தினசரி மார்க்கெட் அருகே உள்ள விநாயகர் கோயிலை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், காவிரி கரையோரத்தில் உள்ள நகராட்சி மயான வளாகத்தில் எரிவாயு தகன மேடைக்கு செல்லும் பாதையை தண்ணீர் சூழ்ந்தது. கரையோர பகுதிகளை சேர்ந்த குடியிருப்புவாசிகள் உடமைகளுடன் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இடையே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு 2வது நாளாக மூடப்பட்டது. மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்றுமுன்தினம் அதிகாலை திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்தது. நேற்று காலை நிலவரப்படி முக்கொம்புக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

இதில் காவிரியில் 34,500 கன அடியும், கொள்ளிடத்தில் 95,500 கன அடியும் திறந்து விடப்பட்டது. இதேபோல் கல்லணையில் இருந்து காவிரியில் 7,010 கனஅடி, வெண்ணாற்றில் 1,505 கன அடி, கல்லணை கால்வாயில் 501, கொள்ளிடத்தில் 3,690 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி, கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் இந்த ஆறுகளின் கரையோர பகுதிகள் மற்றும் இதையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சலவை தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் நீராட யாரும் வர வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

முக்கொம்பில் ஆய்வு: திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது காவிரி மற்றும் கொள்ளிடம் அணைகள் பற்றியும், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் முக்கொம்புக்கு வரும் தண்ணீரின் அளவு, வெளியேற்றப்படும் அளவுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் ேகட்டறிந்தார்.

கொள்ளிடம் ஆற்றில் தூங்கிய போதை முதியவர் மீட்பு
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை 6.30 மணியளவில் முதியவர் ஒருவர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தார். அப்போது, பாலப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக ரங்கம் தீயணைப்பு குழுவை சேர்ந்த ஒரு வீரர், மேம்பால பகுதியில் இருந்து கயிறு மூலம் ஆற்றுக்குள் இறங்கினார். பின்னர் மற்றொரு கயிறு மூலம் தண்ணீரில் தத்தளித்த நபரை கட்டி மேலே கொண்டு வந்தனர். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் (60) என்பது தெரியவந்தது. அவர் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மது அருந்தி, போதையில் நேற்று முன்தினம் இரவு பாலத்தின் கீழ் படுத்து தூங்கிய போது, வெள்ளத்தில் சிக்கியது தெரிய வந்தது. போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரம் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம் உள்ளது. ஆற்றில் வரும் வெள்ளம் காரணமாக இதன் அடிப்பகுதி அரிக்கப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் நள்ளிரவு கொள்ளிடம் புதிய பாலத்தின் கீழ் உள்ள தடுப்புச்சுவர் 10 அடிக்கு மேல் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக ேநப்பியர் பாலத்தில் நேற்று மதியம் முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இருபுறமும் நுழைவாயில்களில் போலீசார் பேரிகார்டு வைத்து தடுப்பு அமைத்துள்ளனர். வாகனங்கள் சென்னை- திருச்சி பைபாஸ் பாலத்தில் திருப்பி விடப்பட்டன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து ஊர்த்து சென்றன.

The post மேட்டூரில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: காவிரி கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Cauvery ,Minister ,Udayanidhi Stalin ,Trichy ,Mukkombu ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும்...