கிருஷ்ணகிரி, ஆக.1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 113 பள்ளிகளில் பயிலும் 14,581 மாணவ, மாணவிகளுக்கு ₹7.03 கோடி மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முன்னிலை வகித்தார். விழாவில், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று, 618 மாணவிகளுக்கு ₹29 லட்சத்து 41 ஆயிரத்து 680 மதிப்பில், அரசின் இலவச சைக்கிள்களையும், பல்வேறு துறைகள் சார்பில் 215 பயனாளிகளுக்கு ₹35 லட்சத்து 93 ஆயிரத்து 494 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், 3,993 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 2.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 113 பள்ளிகளில் பயிலும் 14,581 மாணவ, மாணவிகளுக்கு ₹7 கோடியே 2 லட்சத்து 77 ஆயிரத்து 620 மதிப்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு பயிலும் 618 மாணவிகளுக்கு ₹29 லட்சத்து 41 ஆயிரத்து 680 மதிப்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த 21 மாணவ, மாணவிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த 3 மாணவிகளின் மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் ஹரிதா என்ற மாணவி, கோ-கோ, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை பெற்றுள்ளார். பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக வேலைவாய்ப்பு, சொத்து ஆகியவற்றில் முன்னுரிமை, 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெண்கள் பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், தாசில்தார் பொன்னாலா, தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post 14,581 மாணவ, மாணவிகளுக்கு ₹7.03 கோடியில் இலவச சைக்கிள் appeared first on Dinakaran.