மேட்டுப்பாளையம்,ஆக.1: மேட்டுப்பாளையம் – நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1935 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.இச்சங்கத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 46,548 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு ஊட்டி, கோத்தகிரி,குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் வாகனங்கள் மூலமாக விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு சீசன் இல்லாத நாட்களில் 3 முதல் 4 லாரிகளில் சுமார் 15 டன் அளவிற்கும்,சீசன் நாட்களில் 40 முதல் 50 லாரிகளில் சுமார் 100 டன் வரையும் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
பின்னர்,கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பணியாளர்கள் மூலமாக உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு தரம் வாரியாக 45 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி ஏலம் விடப்படுகின்றன.
இங்கு வரும் வியாபாரிகள் உருளைக்கிழங்கு மூட்டைகளை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துச்சென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்,தூத்துக்குடி துறைமுகம் வழியாக மாலத்தீவு, இலங்கைக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.இங்கு இடைத்தரகர்கள் இன்றி உருளைக்கிழங்குகள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வியாபாரிகளுக்கு கமிஷன் கொடுக்கத்தேவையில்லை. மேலும்,விவசாயிகள் இங்கு விற்பனை செய்வதற்கு முன்பாகவே தாங்கள் கொண்டு வந்திருக்கும் உருளைக்கிழங்குகளை அடமானமாக வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் இங்கு 24 மணி நேரமும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உருளைக் கிழங்குகளை விற்பனைக்காக கொண்டு வரலாம். இதற்காக விவசாயிகள் இங்கு தங்கிக்கொள்ள குறைந்த வாடகையில் ரூம் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. வெளி மார்க்கெட்டுகளை காட்டிலும் விவசாயிகளுக்கு அதிகப்படியான சலுகைகள் கிடைப்பதால் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உருளைக்கிழங்குகளை விற்பனை செய்வதில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக இச்சங்கத்தின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர் ஒருவர் கூறுகையில்: கடந்த 2022 – 23 ம் நிதியாண்டில் 13,089 டன் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ரூ.32.14 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.இதேபோல் நடப்பு நிதியாண்டான 2023 – 24ம் ஆண்டில் மொத்தமாக 20,677 டன் உருளைக்கிழங்குகள் ரூ.54.20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் விற்பனையும்,வர்த்தகமும் அதிகரித்துள்ளது. தற்போது ஊட்டி உருளைக்கிழங்குகள் மட்டும் தான் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வரும் 3ம் தேதி முதல் ஊட்டி பூண்டுகள் இச்சங்கத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.இதனால் பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யலாம்.நீலகிரி மாவட்ட விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.
The post நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடப்பாண்டில் உருளைக்கிழங்கு வர்த்தகம் appeared first on Dinakaran.