நன்றி குங்குமம் டாக்டர்
வாரிசு நடிகராக திரைத்துறைக்குள் என்டரி ஆனாலும், நந்தா, காக்க காக்க, பேரழகன், வாரணம் ஆயிரம், சிங்கம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த பார்ட்டி, வாடிவாசல் படங்கள் வரைக்கும் வெவ்வேறு வேடங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுல்லாமல், அந்தந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தபடி படத்துக்கு படம் தன்னுடைய உடல் அமைப்பையும் தோற்றத்தையும் மாற்றிக் கொண்டு மில்லியன் கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் சூர்யா. அவர், தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்னென்ன மாதிரியான ஃபிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்கிறார், என்ன மாதிரியான டயட்டுகளை பின்பற்றுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒர்க்கவுட்ஸ்: தினசரி குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது கட்டாயமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த இரண்டு மணி நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் கட்டாயம் கார்டியோ பயிற்சிகள் செய்வது வழக்கம். அதைத் தொடர்ந்து எடையை நிர்வகிக்கும் பயிற்சிகள், தசைகளை வலிமையாக்கும் சில பயிற்சிகளையும் வழக்கமாக மேற்கொண்டு வருகிறேன். அதைத் தவிர்த்து புல் – அப்ஸ், புஷ் – அப்ஸ் மற்றும் கால்களை வலுவூட்டும் சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். இவை எல்லாவற்றோடும் ஜாகிங்கும் யோகாவும் தினசரி பயிற்சியில் உண்டு. இது தவிர, சைக்கிளிங், நடைப்பயிற்சியும் உண்டு. அதுமட்டுமின்றி, தினமும் அரை மணிநேரம் ஏரோபிக்ஸ் பயிற்சிகளும் செய்கிறேன்.
டயட்: என்னைப் பொருத்தவரை, உடற்பயிற்சி 50 சதவீதம் என்றால், உணவு 50 சதவீதம். இரண்டும் பேலன்ஸாக இருந்தால்தான் உடலும் ஃபிட்டாக இருக்கும். எனவே, உடற்பயற்சியில் எவ்வளவு கவனத்துடன் இருக்கிறேனோ அதுபோலவே உடற்பயிற்சிக்குப் பின்பாக எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும் அதிக கவனமாக இருப்பேன். ஏனென்றால், நாம் என்னதான் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினாலும், அதை முடித்தபின் உணவை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எந்த பயிற்சிகளும் பலனளிக்காது போய்விடும்.
எனவே, டயட்டில் அதிக கவனமாகவே இருப்பேன். அந்தவகையில், பொரித்த உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள் போன்றவற்றை முடிந்தளவு தவிர்த்துவிடுவேன். எந்த உணவாக இருந்தாலும் உப்பு, சர்க்கரை இரண்டுமே மிகக் குறைந்த அளவிலேயே சேர்த்துக் கொள்வேன். அதுபோன்று உடலை நீரரேற்றமாக வைத்துக் கொள்வதும் ஃபிட்னெஸில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அது உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.
என்னுடைய உடற்பயிற்சிகளை முடித்த பின்பு, ஒரு டம்ளர் பால் அல்லது மில்லட் கஞ்சி மற்றும் 5-6 முட்டையின் வெள்ளைக் கருவும் எடுத்துக் கொள்கிறேன். முட்டையில் உள்ள புரதமும் பாலில் உள்ள கால்சியமும் உடற்பயிற்சிக்குப் பிறகு உண்டாகும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய உதவுகிறது.
இது தவிர, எண்ணெய் சேர்க்காத காலை உணவுகள் ஏதாவது இருக்கும். மதிய உணவு வேளைகளில் நமது பாரம்பரிய உணவுகளான அரிசி சாதம், பருப்பு வகைகள், கீரைகள், காய்கறிகளை எடுத்துக் கொள்கிறேன். அசைவத்தில் எனது ஃபேவரைட் சிக்கன் கறிதான். வாரத்திற்கு ஒரு முறை சிக்கனை பதமாக வேக வைத்து, அதில் அளவான உப்பு, வெறும் மிளகுத் தூள் மட்டும் சேர்த்து சாப்பிடுவதும் உண்டு. இது தவிர, மீன், இறால் போன்ற கடல் உணவுகளும் விரும்பி சாப்பிடுவேன்.
இரவு உணவில் எப்போதும் 2 சப்பாத்தி தேவைப்பட்டால் சிறிதளவு சாதம் எடுத்துக் கொள்வேன். மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அந்த சமயங்களில் சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழங்களை மட்டுமே ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வேன். இது தவிர, டீக்காஸ் பானங்களை எடுத்து கொள்வேன். இவ்வாறு சில பல ஓர்க்கவுட்ஸ், ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்றிதான் எனது ஃபிட்னெஸை பராமரித்து வருகிறேன்.
தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்
The post சூர்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்… appeared first on Dinakaran.