வாமன அவதாரத்தில் மகாபலியை பாதாளத்தில் தள்ளினார். ஆனால், சுக்கிரனுடைய கண்ணை ஏன் குருடாக்கினார்?

வாமன அவதாரத்தில் மகாபலியை பாதாளத்தில் தள்ளினார். ஆனால், சுக்கிரனுடைய கண்ணை ஏன் குருடாக்கினார்?
– சு.செல்வேந்திரன், அரியலூர்.

இந்த கதை ஒரு சூட்சும தர்மத்தைச் சொல்லுகின்றது. மஹாபலி தானம் தந்தாலும், மகாவிஷ்ணுவுக்கு தானம் தருகின்றோம் என்கின்ற ஆணவம் மனதில் இருந்தது. அவருடைய குரு சுக்ராச்சாரியார் சொல்லியும் கேட்கவில்லை. அதனால் இரண்டு குற்றங்கள் அவனிடத்திலே சேர்ந்து விட்டன. சுக்ராச்சாரியார் கண்ணை ஏன் குத்தினார் என்று சொன்னால், தர்மம் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை செய்பவனையும் தடுத்தான் என்பது ஒரு குற்றம். வந்து இருப்பது மகாவிஷ்ணு என்று தெரிந்தும் அவனிடத்திலே சரணடை என்று தன் சிஷ்யனுக்கு நல்வழி காட்ட வேண்டி இருக்க, கபட எண்ணத்தோடு வந்திருக்கிறான், தராதே என்று தவறான ஆலோசனையைக் கூறினார் அல்லவா, அதற்காகத்தான் கண் போயிற்று என்று உரையாசிரியர்கள் பதில் சொல்லி இருக்கின்றார்கள்.

திருப்தி என்பது வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
– சங்கரன், பெரும்பாக்கம்
.
திருப்தி என்பது ஒரு மனநிலை. (state of mind) அந்த மனநிலையை நாம் நம்முடைய நேர்மையான சிந்தனையால் உருவாக்கிக் கொள்ள முடியும். அது பொருள்களினால் வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே திருப்தி வந்துவிடும். தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாதவன் எத்தனைப் பொருள்கள் வந்தாலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தி அடையாதவன் வாழ்வில் நிஜமான சந்தோசம் இல்லை. இருக்கின்ற பொருள்களும் அவனுக்கு மகிழ்ச்சியைத் தராது.

இவர் நம்மை நிஜமாகவே நேசிப்பவர் என்பதை எப்போது புரிந்து கொள்ள முடியும்?
– வித்யாமனோகரன், திருமங்கலம்.
நமக்கு ஒரு கஷ்டம் வரும்போதுதான் புரிந்து கொள்ள முடியும். நாம் நன்றாக இருக்கின்ற பொழுது நம்மிடம் அன்பு பாராட்டுவதற்கு அதிகம் பேர் இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரும் நிஜமாகவே அன்பு பாராட்டுபவர்கள் அல்லர். பலர் அன்பு பாராட்டுவதாக நடிப்பவர்கள். அதே நேரத்தில் நமக்கு ஒரு துன்பம் வருகின்ற பொழுது அதில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை கணக்கிடும் போது தான் நம்மிடம் நிஜ அன்பு வைத்தவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள முடியும்? அதனால்தான் பெரியவர்கள் மனிதர்களை புரிந்து கொள்வதற்கு துன்பமும் உதவும் என்றார்கள்.

சிலர் கோபத்தில் பிறரைத் திட்டும் போது முட்டாள் என்று சொல்லித் திட்டுகின்றார்களே?
– து.அருள், கடம்பூர்.

பொதுவாக அறிவாளிகள் இந்த வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை. காரணம் அறிவாளிகள் பிறரை முட்டாள் என்று திட்டுவதற்கு முன், தாம் அறிவாளிகள் இல்லை என்று உணர்வார்கள். ஒரு ஞானி சொன்னார்; என் குறையை அகற்றுவதே எனக்கு பெரிய துன்பமாக இருக்கின்ற பொழுது, இறைவன் மற்றவர்களுக்கு சரியான அறிவை கொடுக்கவில்லையே என்று வருந்துவதற்கு எனக்கு நேரமில்லை என்றார். பிறரை திட்டுவதற்கு முன் அந்தத் தகுதி நமக்கு இருக்கிறதா என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

கடவுள் இந்த உருவத்தில்தான் இருக்கிறான் என்று நினைத்து அவனுக்கு ஒரு உருவத்தை கற்பித்து வணங்குவது சரியான முறையாக இருக்குமா?
– அனுராதா, வேலூர்.

இதற்கு பலர் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். இன்ன உருவத்தில் கடவுள் இருப்பாரா என்று கேட்கின்ற நீங்கள், இந்த உருவத்தில் இருக்க மாட்டார் என்று மட்டும் எப்படிச் சொல்வீர்கள்? இரணியன் பிரகலாதனிடம், இந்தத் தூணில் உன் கடவுள் இருப்பானா என்று கேட்கும் பொழுது, ‘‘இருப்பான்’’ என்று சொல்ல, அந்தத் தூணில் இருந்து வெளிப்படுகின்றார் கடவுள். அப்படி வெளிப்படுகின்ற பொழுது இரணியன் வாங்கிய வரத்துக்குத் தக்க படி தன்னுடைய உருவத்தை நரசிங்கமாக எடுக்கின்றான். அப்படியானால், நரசிங்கம்தான் அவன் உருவமா என்றால், வாமன அவதாரத்தில் திரிவிக்கிரமனாக நிற்கிறான். அதுதான் அவருடைய வடிவமா என்று சொன்னால், வராக அவதாரத்தில் பன்றி ரூபத்தில் வருகிறான். இதிலிருந்து அவன் எந்த உருவத்திலும் இருக்கக்கூடியவன் என்பது தெரிகிறது அல்லவா! எல்லா உருவத்திலும் இருக்கக்கூடியவன், நாம் வடிவமைத்து, இந்த உருவத்தில் இருக்கின்றான் என்று நம்புகின்ற உருவத்தில் எப்படி இல்லாமல் இருப்பான்!

கிரக தோஷத்தால் திருமணம் தடைபடுகிறது, என்ன பரிகாரம்?
– ரமாமணி, திருத்துறைப்பூண்டி.

நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்தால், இப்பொழுது பெரும்பாலான திருமணங்கள் கிரக தோஷத்தால் தடைப்படுவதாகத் தெரியவில்லை. கிரகத்தில் உள்ளவர்கள் (வீட்டில் உள்ளவர்கள்) தோஷத்தால் தடைபடுவதாகத்தான் தெரிகிறது. மிக அதிக எதிர்பார்ப்பு, பேராசை போன்ற பல விஷயங்கள் இப்பொழுது திருமண பந்தத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதைத்தான். இதே ராகு கேது, செவ்வாய் தோஷம் உள்ள அத்தனைப் பேருக்கும் 30 வருடங்களுக்கு முன் இருந்தாலும், சரியான காலத்தில் திருமணம் நடந்தேறியதையும் நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது இல்லாத தோஷம் இப்பொழுது எங்கே வந்து விட்டது? ஆயினும் ஒரு பரிகாரத்தைச் சொல்லுகின்றேன். தினமும் காலையில் குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி “வேயுறு தோளிபங்கன்” எனத் தொடங்கும் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யுங்கள். அது கிரக தோஷத்தையும் கிரகத்தில் உள்ளவர்கள் தோஷத்தையும் போக்கும்.

தாராளமாக இருப்பது நல்லதா? சிக்கனமாக இருப்பது நல்லதா?
– ஆர்.நந்தினி, திருச்சி.

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை சிக்கனமாகவும் இருக்க வேண்டும், தாராளமாகவும் இருக்க வேண்டும். எதில் தாராளம், எதில் சிக்கனம் என்பது முக்கியம். சிக்கனம் என்பது தேவையில்லாத செலவுகளை செய்யாமல் இருப்பது. தாராளம் என்பது அப்படி மிச்சப்படுகின்ற பணத்தை, தேவை உள்ளவர்களுக்குக் கொடுப்பது. தாராளம் இல்லாத சிக்கனம் பிறர் பொருளின் மீது ஆசையை உண்டாக்கும். சிக்கனம் இல்லாத தாராளம் வீண்பொருள் விரயத்தை ஏற்படுத்தும். எனவே சிக்கனமும் தாராளமும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

 

The post வாமன அவதாரத்தில் மகாபலியை பாதாளத்தில் தள்ளினார். ஆனால், சுக்கிரனுடைய கண்ணை ஏன் குருடாக்கினார்? appeared first on Dinakaran.

Related Stories: