கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா முன்னேற்பாட்டு பணிகள்

 

அரியலூர், ஜுலை 31: அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர் ரத்தினசாமி பேசியதாவது: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை நட்சத்திரம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வருகிறது.

இந்நாளை அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாட, கடந்த 2021ல் தமிழக அரசு உத்தரவிட்டு, நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வெகு விமர்சையாக வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி நடத்துவது குறித்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது.

இவ்விழாவிற்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள விழாத் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு நடைபெறும் ஆடித்திருவாதிரை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாவட்ட நிலை அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை அனைவருடம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஆட்சியர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழா முன்னேற்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: