மூன்று யுகம் கண்ட அம்மன்

பரபரப்பான வர்த்தகத் தலமாக மாறிவிட்ட வள்ளியூர் நகரிலிருந்து கிழக்கு நோக்கி விலகி, அந்தப் பிரதான சாலையிலிருந்து இடது பக்கம் சரிந்து இறங்கினால், அரை கிலோ மீட்டர் தொலைவில் மென்மையான தென்றலும், பசுமை மிகுந்த, குளுமை தரும் வளமும், வயல்வெளி மணமும் நம்மைப் பரவசப்படுத்தும்! நகர நாகரிகம் பாதிக்காத அந்த கிராமியச் சூழலில் இன்னும் தொடர்ந்து சென்றோமானால் முழுமையாய் நிறைந்திருக்கும் தண் குளத்தைக் காணலாம். அதன் கிழக்குக் கரையில் எளிமையாய் அமைந்திருக்கிறது மூன்று யுகம் கண்ட அம்மன் கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், சீரிய கோயில். அந்தப் பகுதி மக்களின் குலதெய்வம் அந்த அம்மன். பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்த ஊர் மக்கள், ஆண்டுதோறும் தவறாமல் இக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

கோயில் உருவான புராணம் என்ன?

காஞ்சி மாநகரை ஆண்டுவந்த பாண்டிய ராஜாவுக்கு, தவமாய் தவமிருந்து, பல வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து ஐந்து ஆண் வாரிசுகள் அமைந்தார்கள். குலசேகர பாண்டியன், கூன் பாண்டியன், பொன் பாண்டியன், சேகரப் பாண்டியன், சேர்மப் பாண்டியன் என்று பெயர் கொண்டு அவர்கள் வளர்ந்து வந்தார்கள். பஞ்ச பாண்டவர்களைப் போல ஒருவருக் கொருவர் மிகவும் பாசம் கொண்டவர்களாக விளங்கினார்கள். ஒருசமயம், ஜோதிடர் ஒருவர், அவர்களுடைய ஜாதகங்களைக் கணித்துப் பார்த்து, மூத்தவன் குலசேகரப் பாண்டியனுக்கு பெண்ணொருத்தியால் பிரச்னை ஏற்படும் வகையில் தோஷம் உள்ளது என்று ஆரூடம் சொன்னார். ஆகவே ஒரு கன்னிப் பெண் சக்தியாக வழிபடப்படும் தலத்திற்குச் சென்று, அம்மனை வழிபட்டு, பல்வகை தானங்களைச் செய்ய வேண்டும் என்று பரிகாரமும் சொன்னார்.

அதை மேற்கொள்ள குலசேகர பாண்டியன், தயாரானபோது பிற நான்கு சகோதரர்கள் தாமும் உடன் வருவதாகச் சொல்லி, அவ்வாறே மூத்தவனைப் பின் தொடர்ந்தார்கள். ஜோதிடர் சொன்னதுபோல கன்னியாகுமரி சென்று, கடலில் நீராடி, குமரி அம்மனை உளமாற வழிபட்டார்கள். அந்தத் தலத்திலேயே உணவு, உடை, பணம், பொருள் என்று ஏராளமாக தானம் செய்தார்கள். பிறகு மனதில் தெளிவு ஏற்படவே, தாம் மேற்கொண்ட பரிகாரத்துக்கு உரிய பலன் கிட்டும் என்ற நம்பிக்கையும் கொண்டார்கள். காஞ்சிக்குத் திரும்பும் வழியில், தற்போதைய நெல்லை மாவட்டம், பணகுடி என்ற ஊருக்கு வந்தபோது, மன்னரின் வேட்டை நாய்கள் சில முயல்களைத் துரத்தின. வீரர்களும் பின் தொடர்ந்தார்கள். வள்ளியூர் எல்லை அருகே வந்தபோது, அங்கே இருந்த உயர்ந்த புற்று ஒன்றினுள் முயல்கள் புகுவதைக் கண்டார்கள். நாய்கள் அந்தப் புற்றைச் சுற்றிச் சுற்றி வந்தபோது பளிச் சென்று முயல்கள் வெளிப்பட்டு, நாய்களைத் துரத்தின. எதற்கும் அஞ்சாத அந்த நாய்கள் பயந்து, மிரண்டு ஓடுவதைக் கண்ட வீரர்கள் திகைத்தனர். மன்னனிடம் விவரம் தெரிவித்தனர்.

வியப்புற்ற பாண்டியன், விரைந்தோடி வந்து புற்றைப் பார்க்க, அதிலிருந்து ஒளி வீசியது. உடனே புற்றைக் கலைக்கச் செய்தால், பேரழகு அம்மன் சிலை ஒன்று வெளிப்பட்டது. கூடவே ‘‘கன்னியாகுமரியை வழிபட்டதால், உன் தோஷம் உன்னைவிட்டு விலகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது எனக்கு இங்கேயே ஒரு கோயில் உருவாக்கு. உனக்காகவும் ஒரு கோட்டையை அமைத்துக் கொண்டு தம்பியருடன் இணைந்து அரசாட்சி நடத்து,’ என்ற அசரீரியும் கேட்டது.

நெகிழ்ந்து போன மன்னன், அவ்வாறே செய்தான். வள்ளியூர் மற்றும் காஞ்சி இரு தலங்களிலும் சகோதரர்களின் ஆட்சி சிறப்புற்று விளங்கியது. இந்த அம்மனுக்கு குலசேகர பாண்டியன் என்ன பெயர் சொல்லி அழைத்தான் என்பது தெரியவில்லை. ஆனால், ‘மூன்று யுகம் கண்ட அம்மன்’ என்ற பெயர் இன்றளவும் பிரபலமாகி உள்ளது.

பொதுவாக, நீத்தார் கடன் நிறைவேற்றும்போது மூன்று தலைமுறைகளை நினைவு கூர்ந்து அவர்களுக்குப், படையலிட்டு, தம்முடைய இந்த நல்ல நிலைக்குக் காரணமான அவர்களுக்கு நன்றி சொல்லி வணங்குவது வழக்கம். நம்முடைய அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அவருக்கும் முந்தைய தாத்தா என்று வம்சாவழியாக பல தலைமுறையினர் இவ்வாறு அவரவருக்கு முந்தைய மூன்று தலைமுறைகளை வணங்கி வந்திருப்பார்கள். இந்த யுகம் மட்டுமல்லாமல், இதற்கு முந்தைய துவாபரயுகம், திரேதாயுகம், கிருதயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் இந்த நடைமுறை இருந்திருக்க வேண்டும்.

இந்தத் தலைமுறை வரிசையில் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, அவருக்கும் முந்தைய பாட்டி என்ற உறவுகளுக்கும் நீத்தார் கடன் மேற்கொள்வதும் வழக்கம். குலசேகர பாண்டியனோ, அவனுக்கு முந்தைய வம்சத்தாரோ, இந்த வழிபாட்டில், மூதாதைப் பெண் உறவினருக்கு, உரிய மரியாதை செலுத்தத் தவறியிருக்க வேண்டும். அதனால்தான் அவனுக்கு அத்தனை காலதாமதமாக மகப்பேறு கிட்டியிருக்கிறது. மகன் குலசேகர பாண்டியனுக்கும் தோஷம் தொடர்ந்தது.

இவ்வாறு முந்தைய மூன்று யுகங்களாக வழிபடப்படும் பெண் தெய்வமே (உறவே) இந்தக் கலியுகத்தில் மூன்று யுகம் கண்ட அம்மனாக வழிபடப்படுகிறது என்று சொல்லலாம். ஊர்ப் பெரியவர் ஒருவர் சொன்ன இந்த விளக்கம் ஏற்புடையதாக இருந்தது. கருவறையில் அம்மன் இடது காலை மடித்து வைத்து, வலது காலைத் தொங்கவிட்டு, நான்குத் திருக்கரங்களுடன் அற்புத காட்சியாக அருள்கிறாள்.

முன் மண்டபத்தில் வலது பக்கம் ஜயந்தீஸ்வரர் – சௌந்தரநாயகி அம்மன், தம் முன்னே நந்தியுடன் கற்சிலைகளாக வீற்றிருந்து, அருள் பாலிக்கிறார்கள். அருகே சுமார் ஐந்தடி உயரத்தில் சூலாயுதம் தாங்கி, கோரைப் பற்களுடன் காட்சியளிக்கிறாள் முத்துமாரி அம்மன். வெளிப் பிராகாரத்தில் ஐந்து ராஜா திருக்கோயில் சந்நதி காணப்படுகிறது. இதில் தம் பெற்றோருடன் பாண்டிய சகோதரர்கள் ஐவரும் லிங்க ரூபத்தில் விளங்குகிறார்கள். கோயில் வாசலுக்கு உள்ளே இடப்புறத்தில் நவகிரக பாணியில் நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆடி மாதம் முதல் செவ்வாய்க் கிழமை அன்று உற்சவர் அம்மனை அழகுற அலங்கரித்து ஒரு பீடத்தில் அமர்த்தி, பூசாரி அந்த பீடத்தைச் சுமக்க, கோயில் வெளிப் பிராகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். பல ஊர்களிலிருந்தும் வந்திருக்கும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பழங்கள், பட்சணங்கள் என்று சீர் வரிசைகளை சுமந்து கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

அதோடு பல்வேறு ஊர்களில் வசிக்கும் அம்மனின் பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறை இக்கோயிலுக்கு ஒருங்கிணைந்து வந்து, அபிராமி அந்தாதி பாடல்களை இசையுடன் பாடி, இறைவியை மகிழ்விக்கிறார்கள். அதுநாள்வரை தங்களது நலனுக்கு அருளிய அம்மன், தொடர்ந்து தங்களுக்கும், ஏன், இந்த உலகோர் அனைவருக்குமே ஆசி வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். பொதுவாக, அனைவருமே அம்மனுக்குப் புடவை சாத்தி, பழவகைகளை நிவேதனம் செய்கிறார்கள்.

மங்காத செல்வத்தையும், வீடு, வாகன யோகங்களையும், மங்களங்களையும் அள்ளித் தரும் அன்னை இந்த மூன்று யுகம் கண்ட அம்மன். அடுத்தடுத்த வாரிசுகளின் வளம் மிக்க வாழ்வுக்கும் பேரருள் புரிகிறாள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபடுவது விசேஷமானது என்கிறார்கள்.

கோயில் தொடர்புக்கு: 94436 13688.
எப்படி செல்வது? திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது வள்ளியூர். இந்நகரின் பேருந்து நிலையத்திலிருந்து சித்தூர் செல்லும் சாலையில், இசக்கி அம்மன் கோயில் செல்லும் வழி என்ற அறிவிப்புப் பலகை காட்டும் சாலையில் இறங்கி, சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்து, மூன்று யுகம் கண்ட அம்மனை தரிசிக்கலாம்.

The post மூன்று யுகம் கண்ட அம்மன் appeared first on Dinakaran.

Related Stories: