×

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புட்செல் போலீசார் நடவடிக்கை

பொள்ளாச்சி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலணாய்வு துறையினர் (புட்செல்) ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக, கேரள எல்லை பகுதிகளில் கூடுதலாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய ரோடுகளில் ரோந்து பணி, அடிக்கடி வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், சில நேரத்தில் அரிசிக்கடத்தல் என்பது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது.
அதிலும், கடந்த ஒரு ஆண்டுகளாக புட்செல் போலீசார் பல்வேறு கட்டமாக வாகன சோதனை மேற்கொண்டு, இருசக்கர வாகனம், கார், டெம்போ, லாரி உள்ளிட்டவைகள் மூலமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே, கேரளாவுக்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்ல நடுப்புணி, பாலக்காடு ரோடு, திருச்சூர் ரோடு, செமனாம்பதி ரோடு, ஆதியூர், சென்னியூர் வழித்தடம் மற்றும் கிராமப்புற சாலைகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பொது வினியோக திட்டத்தின்கீழ் மக்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சரக்கு வாகனங்களில் நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்திலிருந்து பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தை முழுமையாக கட்டுப்படுத்த புட்செல் போலீசார் தனி குழு அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, சில மாதமாக குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கோவை மண்டல எஸ்பி சந்திரசேகர் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி அலகு புட்செல் போலீசார் கேரள எல்லைப்பகுதியான பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபரம், கோவை அருகே வேலந்தாவளம், வாளையர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவுக்கு நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் புட்செல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புட்செல் போலீசார் கூறுகையில், ‘‘ரேஷன் அரிசிகளை பதுக்குவோர், அவற்றை கடத்துவோர் குறித்து ரகசியமாக கண்காணித்து முக்கிய வழித்தடங்கள் மற்றும் கிராம சாலைகள் என பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகன சோதனை செய்து வருகிறோம். இருப்பினும், இருசக்கர வாகனம் முதல் கனரக வாகங்கள் வரை ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

தொடர்ந்து, பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவம் குறித்து தெரிந்தால் 18008996950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’’ என்றனர்.

The post தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புட்செல் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Butsel ,Tamil Nadu ,Kerala ,Pollachi ,Criminal Investigation Departments ,Butzel ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...