×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டு கொடுத்த 3 பேர் கைது: மனைவியுடன் வெளிநாடு தப்பிய வழக்கறிஞர் குறித்து விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து கொடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்ற வழக்கறிஞர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 வழக்கறிஞர்கள் உள்பட இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் கைதான 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

அதன் பிறகு பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 3 பேரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில் பிரபல ரவுடி சம்பவ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வழக்கறிஞர் ஹரிஹரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் போலீஸ் காவல் முடிந்து அவர் மீண்டும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் பின்புலத்தில் யார்யார் செயல்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, பாஜ பிரமுகர் அஞ்சலை, அதிமுக வார்டு கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 18 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

மேலும் சிலரை பிடித்து இந்த வழக்கில் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே, கோடம்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்ற நூறு (27), கோடம்பாக்கம் பூபதி நகரைச் சேர்ந்த முகிலன் (32), கோடம்பாக்கம் காமராஜர் நகர் 6வது தெருவைச் சேர்ந்த அப்பு என்ற விக்னேஷ் (21) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் விஜயகுமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

இவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் வைத்துள்ளனர். அதன் பிறகு அந்த நாட்டு வெடிகுண்டுகளை அப்பு எடுத்து விஜய் மற்றும் முகிலனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து ஓமந்தூரார் மருத்துவமனை அருகே ஹரிகரன் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர் அருளிடம் நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்துள்ளனர்.

பின்னர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நாட்டு வெடிகுண்டுகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஆனால் அவரை வெட்டி சாய்க்க முடியாத பட்சத்தில் இதனை பயன்படுத்தலாம் என கொலையாளிகள் வைத்துள்ளனர். கடைசிவரை வெடிகுண்டுகளை பயன்படுத்தவில்லை. கொலை சம்பவம் நடந்த அன்று சம்பவ இடத்திலிருந்து நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள விஜய், முகிலன், அப்பு ஆகிய 3 பேரும் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதில் அப்புவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள ஒரு வழக்கறிஞருக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவர் மூலமாக நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வர சொன்னதும், அதனை அவர் ஹரிஹரனுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரையும் 13வது நீதிபதி தர்மராஜ் முன் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.

அவர்களை அடுத்த மாதம் 9ம் தேதி வரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து அப்புவிடம் கொடுத்த ஒரு நபரையும், ஹரிஹருடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிய மற்றொரு வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலை பிடிக்க சுமார் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதில் சம்பவ செந்திலுடன் மிக நெருக்கமாக இருந்த ஹரிகரன் என்ற வழக்கறிஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வழக்கறிஞர் இந்த கொலை சதியில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. இவர் நாட்டு வெடிகுண்டுகளை ஹரிகரன் வாங்கும்போது அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றதும், மேலும் இந்த கொலைக்காக சம்பவ செந்தில் கொலையாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும்போது அந்த வழக்கறிஞர் மூலமாக அந்த பணம் சென்றதும் தற்போது தெரியவந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு அடுத்தடுத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கறிஞர் தனது மனைவியுடன் டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சம்பவ செந்தில் வெளிநாட்டில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவரோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞரும் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்த குறிப்பிட்ட நபர் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, வெடிகுண்டுகளை எடுத்து வந்த விஜய், முகிலன், அப்பு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* சம்பவ செந்திலுடன் மிக நெருக்கமாக இருந்த ஹரிகரன் என்ற வக்கீல் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வழக்கறிஞர் இந்த கொலை சதியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டு கொடுத்த 3 பேர் கைது: மனைவியுடன் வெளிநாடு தப்பிய வழக்கறிஞர் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Bahujan Samaj Party State ,President ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...