×

தமிழகத்தில் 9.2 லட்சம் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 9.2 லட்சம் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மனித உடலில் கல்லீரல் பங்கு என்பது இன்றியமையாததாகும். உடலில் கிட்டத்தட்ட 500 முக்கிய செயல்பாடுகள் இதனை அடங்கியே உள்ளது. நாம் சாப்பிடும் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றின் செரிமானம் நடைபெறுகிற ஒரே இடம் கல்லீரல் மட்டுமே.

கல்லீரல் பாதிப்பு உண்டாகும் போது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் திறனை கொண்டது. சமீப காலமாக கல்லீரல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. உலக அளவில் 300மில்லியன் மக்கள் கல்லீரல் பாதிப்போடு வாழ்வதாகவும், 1.34 மில்லியன் மக்கள் இந்த பாதிப்பால் உலக அளவில் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் இறப்புக்கான பொதுவான காரணங்களில் கல்லீரல் அழற்சி 10வது இடத்தில் உள்ளது. கல்லீரல் அழற்சி குறித்து தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரையிலும் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி தடுப்புதற்காக பிறந்த 24 மணி நேரத்தில் கல்லீரல் அழற்சி தடுப்பூசி (Hepatitis B vaccine) செலுத்தப்படுகிறது. அத்துடன் 6 வது வாரம், 10 வது வாரம் மற்றும் 14 வது வாரத்தில் அடுத்தடுத்து தவணையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 9.2 லட்சம் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வவிநாயகம் கூறியதாவது: கல்லீரல் அழற்சி தடுப்பூசி கண்டிப்பாக குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும், செலுத்தவில்லை என்றால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும் அத்துடன் கல்லீரல் அழற்சி ஏற்படும் அதுமட்டுமின்றி கல்லீரல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பிறந்த உடனே இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் 9.2 லட்சம் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள பணியாளர்கள் இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ராஜிவ்காந்தி மருத்துவமனையில் இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தனியாருக்கு நிகராக அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரே ஆண்டில் 12 பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 30 லட்சம் முதல் 70 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post தமிழகத்தில் 9.2 லட்சம் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health ,Chennai ,Public ,Health ,Selvavinayagam ,Public Health Department ,
× RELATED தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்...