×

பாஜவுடன் இணைந்த பிறகு சமூகநீதி பற்றி பேசலாமா என பாமக யோசிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: பாஜவுடன் இணைந்துள்ள பாமக சமூகநீதியை பற்றி பேசலாமா? என்று யோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன், பொதுச் செயலாளர்கள் ஜோஸ்வா, ஜெரால்ட், சிந்துஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு இளைஞர்களின் எழுச்சி பயணத்திற்கான லோகோவை வெளியிட்டார். வருங்கால தேர்தல்களில் இளைஞர் காங்கிரசுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வேண்டும். அதேபோல, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இளைஞர்கள் எழுச்சி சுற்றுப்பயணத்தை மாவட்ட ரீதியாக மேற்கொள்வது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பாஜ அரசு ரயில்வே துறைக்கான பட்ஜெட்டை எடுத்துவிட்டது. ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது.
பாஜவுடன் இணைந்துள்ள பாமக சமூகநீதியை பற்றி பேசலாமா என்று யோசிக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது குறித்து பாஜவிடம் ராமதாஸ் கேட்பாரா?. அதிமுக கொடுத்த 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பாமக முறையாக பெற்றிருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இடஒதுக்கீட்டை அதிமுக அளித்தது. அதிமுகவும், பாமகவும் அரசியல் நாடகமாடிவிட்டு முதல்வரை, ராமதாஸ் குறை சொல்வது நியாயம் ஆகாது. உச்ச நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்று கேட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் மக்களுடன் நான் இருக்கிறேன். இன்றைய தினம் வளர்ச்சியை தடை செய்ய முடியாது. பரந்தூர் விமான நிலைய இடம் கடந்த கால அதிமுக ஆட்சியில் தான் பரிந்துரை செய்யப்பட்டது. மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது. எந்த காலத்திலும் மக்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post பாஜவுடன் இணைந்த பிறகு சமூகநீதி பற்றி பேசலாமா என பாமக யோசிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pamaka ,BJP ,Selvaperunthakai ,CHENNAI ,BAMKA ,Congress ,Selvaperundagai ,Tamil Nadu ,Youth Congress ,State Executive ,Committee ,Satyamurthy Bhavan ,
× RELATED சென்னை வெள்ளத் தடுப்பு திட்டங்கள்...