இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில், நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 62,000 கனஅடியாக இருந்தது. மாலையில் 98,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அங்குள்ள மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 45,598 கனஅடியாக நீர்வரத்து, அதிகரித்தது. பின்னர், படிப்படியாக அதிகரித்து நேற்றிரவு 8 மணியளவில் விநாடிக்கு 81,552 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்றிரவு 95.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 59.16 டி.எம்.சியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மேட்டூர் அணைக்கு முழுமையாக வந்து சேர்ந்தால், இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயரும் என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரைகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் படியும், காவிரியில் படகு ஓட்டவோ, மீனவர்கள் மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது. மேலும், காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ யாரும் செல்லக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* ஆடிப்பெருக்கு விழாவுக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு
ஆடிப்பெருக்கு விழா காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில், ஏராளமான மக்கள் காவிரியில் புனித நீராடி மகிழ்வார்கள். இதனால் காவிரி பாசன வசதி பெறும் சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக நாளை (28ம்தேதி) முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 7 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கனஅடி வீதம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருப்பதால், ஆடிப்பெருக்கு விழா முடிந்த பிறகு, நீர்திறப்பு பாசனத்திற்காக நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post கர்நாடக அணைகளில் 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.