கனமழை எச்சரிக்கை எதிரொலி: நீலகிரியில் 2 வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி: கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. வறண்டிருந்த அணைக்கட்டுகள் அனைத்தும் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன. ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அடுத்தடுத்து சரியும் ராட்சத மரங்களால் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் விநியோகம் தடைபட்டிருக்கிறது. கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 26) விடுமுறை அளித்து அந்த மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார். மானவர்கள் மற்றும் மாணவியர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

The post கனமழை எச்சரிக்கை எதிரொலி: நீலகிரியில் 2 வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: