தர்மபுரி, ஜூலை 26: தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி, டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி கும்மனூர் கிராமத்தில், ரயில்நிலையம் இயங்கி வந்தது. பயணிகள் வருகை சரிந்ததால், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. தற்போது, கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், ஏராளமான பயணிகள் வணிகம் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக பெங்களூரு உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். இந்த ரயில்நிலையம் மீண்டும் திறக்கப்பட்டால், இக்கிராம மக்களும், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்களும் பயன்படுத்துவார்கள். எனவே, இந்த ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நிலம், கட்டிடம் மற்றும் அதன் உள்கட்டமைப்பு வசதிகள் அப்படியே இன்னும் இருப்பதால், இந்த ரயில் நிலையத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post ரயில்வே அமைச்சரை திமுக எம்பி சந்தித்து மனு appeared first on Dinakaran.