விகேபுரம் அருகே அனவன்குடியிருப்பில் மீண்டும் உலா வரும் கரடி

விகேபுரம்: விகேபுரம் அருகே அனவன்குடியிருப்பில் நேற்றிரவு மீண்டும் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்திலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக கோட்டைவிளைபட்டி, வடக்கு அகஸ்தியர்புரம், பசுக்கிடை விளை, அனவன்குடியிருப்பு போன்ற பகுதிகளில் கரடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இவை பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி இரவு நேரங்களில் ஜோடியாகவும், தனித்தனியாகவும் உலா வருகினறன. இந்த கரடிகள் சில நேரங்களில் பொதுமக்களை விரட்டுவது மட்டுமின்றி தாக்கியும் வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு அம்பை காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் அனவன்குடியிருப்பைச் சேர்ந்த சுந்தர் என்பவரது வீட்டு அருகில் கரடி சுற்றித்திரிந்துள்ளது. இவை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அனவன்குடியிருப்பு பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் காணப்படுதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விகேபுரம் அருகே அனவன்குடியிருப்பில் மீண்டும் உலா வரும் கரடி appeared first on Dinakaran.

Related Stories: