பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலாமையமாக மாற்ற முடிவு: கிராம அளவில் வளர்ச்சிக்குழு அமைத்து அருவி பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டம்

தென்காசி: பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற வனத்துறை முடிவு செய்துள்ளது. தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது சிறுவன் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நிலையில் அந்த பகுதியில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு அதற்கான அபாய எச்சரிக்கை ஒலி உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பழைய குற்றாலப்பகுதியானது வனப்பகுதியின் காப்பு காடுகளுக்கு இடையே இருப்பதால் இதனை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வனத்துறை சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

இத்தகைய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் பழைய குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து விடலாம் என தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு சோதனை சாவடிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்காக வனத்துறை சார்பாக சோதனை சாவடிகள் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பகுதியை தற்போது சூழல் சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிடபட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை வனத்துறை தற்போது செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி உரிய விதிமுறைகளை பின்பற்றி அந்த பகுதியை சூழல் சுற்றுலா மையமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த கட்டுப்பாடுகளுடன் வனத்தை காக்கவும் முடிவு செய்துள்ளது.

பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பழைய குற்றால அருவியில் குளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிராம அளவிலான வளர்ச்சி குழு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு உருவாக்கக்கூடிய வளர்ச்சி குழுவின் மூலம் வனத்துறையிடம் இருந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவிக்க கூடிய பொதுமக்கள், வணிகர்களை அழைத்து வனத்துறை தரப்பில் விளக்கமளிக்கும் வகையில் ஒரு கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலாமையமாக மாற்ற முடிவு: கிராம அளவில் வளர்ச்சிக்குழு அமைத்து அருவி பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: