சிவகங்கை, ஜூலை 24: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-25 நிதியாண்டுக்கு ரூ.1.37 கோடி மானிய இலக்கு பெறப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வியாபாரத் தொழில் செய்வதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சமாகும். அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கபடுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவு ஆண்களுக்கு 45 ஆகவும், அனைத்துப்பிரிவு பெண்கள், சிறப்பு பிரிவினர்களான ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 55 வயது வரை உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் மளிகை கடை, ஸ்வீட் ஸ்டால், எலெக்ட்ரிகல் கடை, துணி கடை, காய்கறி கடை, அரிசி கடை, ஹார்டுவேர் மார்ட், ஸ்டேசனரி கடை, பேன்சி ஸ்டோர், செப்பல் கடை, சிமிண்ட் கடை போன்ற விற்பனை தொழில்கள் துவங்க வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகளை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04575-240257, 89255 33989 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் சுய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.