கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூல்; எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்.! தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம்

சென்னை: காலிப் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூல், எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசிவருகிறார் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மது பாட்டில்கள் வயல்வெளிகள், யானை வழித்தடங்கள் மற்றும் பொதுஇடங்கள் என கண்ட இடங்களில் எறிந்து வருவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக மலைப் பகுதிகளில் வாழும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது கூடுதலாக பாட்டிலுக்கு தலா ரூ.10 பெற்று, அந்த பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது வசூலிக்கப்பட்ட ரூ.10 திரும்ப வழங்கலாம் என்ற யோசனை தெரிவித்தது.

இதனை டாஸ்மாக் நிறுவனம் ஏற்று, மலைப்பகுதிகளில் உடனடியாக செயல்படுத்த தொடங்கியது. இந்தப் பணியை தற்போதுள்ள பணியாளர்கள் மூலம் செயல்படுத்துவது, அவர்களது வேலைப் பளுவால், நடைமுறை சிரமங்களை உருவாக்கியது. மேலும் பணியாளர்கள் பல்வேறு தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் பணிகளுக்காக தனியாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம், மதுபானங்கள் விநியோகிக்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களே, பணியாளர்களை நியமனம் செய்து காலிப் பாட்டில்களை பெற்று, எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையிலும் காலிப் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூலித்து, ரூ.297 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இவைகள் எதனையும் அறியாமல் எதிர்கட்சித் தலைவர் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு என்று கூறியிருப்பது, அவரது ஆதரவு ஒப்பந்ததாரர்கள் குரலை எதிரொலிப்பதாகும். பணியில் அமர்ந்தப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரத்தில் இருந்த காலங்களில் அலட்சியம் செய்து விட்டு, இன்று அரசின் வருவாய் இழப்பு குறித்து கூக்குரல் எழுப்பவது அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கடந்த ஆண்டு ரூ.306 கோடி வசூல்; எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்.! தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: