முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து எதிரொலி: புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். ஒன்றிய அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு புதிதாக எந்த திட்டமும், சலுகையும் பட்ஜெட்டில் இல்லை. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் படிக்கும்போது தமிழ்நாடு என்ற வார்த்தையை கூட குறிப்பிடவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் மதவாத ஆட்சியை எதிர்த்து தமிழக மக்கள் வாக்களித்தனர்.

தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு பழிவாங்கும் வகையில், நேற்றைய நிதிநிலை அறிக்கை மூலம் ஒன்றிய பாஜக அரசு பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த போக்கை திமுக, காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வருகிற 27ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அதிரடியாக அறிவித்தார்.

இதனால் முதல்வர் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், டெல்லியில் ஜூலை 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அடிக்கல் நாட்ட இருந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து நடைபெற உள்ளது. அதன்படி, புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து எதிரொலி: புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: