சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது

தண்டையார்பேட்டை: சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தபோதிலும் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். சில மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தண்டையார்பேட்டை நேதாஜிநகரை சேர்ந்த சாமுவேல் (21), கும்மிடிப்பூண்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த லோகேஷ் (19), மீஞ்சூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த காந்த் (20) என்பதும், பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் சண்டை போடுவதற்காக கத்தியுடன் காத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாரிமுனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: