போடி அருகே மீனாட்சி அம்மன் கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள்

*தூர் வாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

போடி : போடி அருகே அம்மாபட்டி கிராம ஊராட்சியில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி அருகே அம்மாபட்டி கிராம ஊராட்சியில் சுந்தரராஜபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், மேல சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம் உள்ளனர்.

இப்பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து மெகா கண்மாயாக உள்ளது. இதன் மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தேனி மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்ட இக்கண்மாய், பொதுப்பணித்துறை காட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கண்மாயில் மீன் வளர்ப்புக்காக தேனி மாவட்ட மீன்வளர்ப்பு துறையிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன்கள் வளர்க்கப்பட்டு, பொது ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில் இந்த கண்மாயில் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை.

இதனால் கண்மாயில் கழிவுகள் மற்றும் மண் சகதிகள் அதிகரித்து தண்ணீர் தேங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கும்நிலை உள்ளது. மேலும் இதில் கொட்டப்பட்டும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் நிலையும் உள்ளது. ஆகையால் கண்மாயினை முழுமையாக தூர்வாரி கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி ராமர் கூறுகையில், தேனி மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்ட கண்மாய் என்றால் மீனாட்சி அம்மன் கண்மாய். இங்கு தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் தேங்கி பெரும் மண் மேடாக காட்சியளிக்கிறது. இக்கண்மாயை தூர் வாரி, படகு சவாரிக்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் சுற்றுலாத்தலமாக மாறுவதுடன் அரசுக்கு வருமானமும் கிடைக்கும் என்றார்.

The post போடி அருகே மீனாட்சி அம்மன் கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள் appeared first on Dinakaran.

Related Stories: