நாகப்பட்டினம் : பாஜ தனது 5 ஆண்டு கால ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது என நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.ஒன்றிய அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிய அரசு மீது விரக்தியடைந்துள்ளனர்.
இது குறித்து நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:அமானுல்லா (நாகூர்): ஒன்றிய அரசு நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் தாக்கலில் பிளாட்டினம் விலை குறைப்பு, செல்போன் மற்றும் செல்போன் சர்ஜர் வரி குறைப்பு என உயர்தட்டு மக்களுக்காகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிதட்டு மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வு உயர்வு பெறவும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் இடம் பெறவில்லை. பீகார் மற்றும் ஆந்திரா மாநிலம் மட்டும் தான் நமது நாட்டில் இருப்பது போல் இந்த பட்ஜெட்டில் நிதிகளை அள்ளி கொடுத்துள்ளது ஒன்றிய அரசு.
எனவே இனிவரும் காலங்களில் இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து மட்டும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை பெற்று கொள்ள வேண்டும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து எந்த வரியையும் ஒன்றிய அரசு கேட்ககூடாது. ஒன்றிய அரசின் பட்ஜெட் பிறமாநிலங்களின் எதிர்ப்பை சந்திக்கும். தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் வழக்கம் போல் மோடி அரசு மோசடி செய்து விட்டது.
தமிழ்செல்வன்(தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர்): பாஜ அரசு தனது ஆட்சியை 5 ஆண்டு காலத்திற்கு காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக தயார் செய்த பட்ஜெட் இது. விவசாயிகளின் நலனை காக்க வேண்டிய ஒன்றிய அரசு அந்த கடமையில் இருந்து முற்றிலுமாக தவறி விட்டது. பிரதமர் விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிந்து விட்டது.
ஆனால் இன்னும் ஒரு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே போல் நமது நாட்டில் 2 கோடிக்கும் மேலாக குத்தகைதாரர்கள் உழவர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கும் இந்த திட்டம் நீடிப்பு செய்யப்படும் என எதிர்பார்த்து ஏமாற்றம் தருகிறது.
தமிழ்நாட்டில் இயற்கை இடர்பாடு ஏற்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு அதிக நிதிகளை ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. இந்த பட்ஜெட் தமிழ்நாட்டை இந்திய நாட்டில் இருந்து ஒன்றிய அரசே பிரித்து விட்டது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கூட இவ்வளவு பெரிய பிரிவினை காட்டப்படவில்லை. அதை விட கொடுமையான பிரிவினையை பாஜ அரசு காட்டிவிட்டது. பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.சித்திக்(நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்க செயலாளர்): பட்ஜெட் கூட்டத்தொடரில் திருக்குறள் கூட இடம் பெறவில்லை. அந்த அளவிற்கு பாஜ அரசு தமிழ்நாடு மக்கள் மீது வெறுப்புடன் உள்ளது என்பதை காட்டுகிறது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ரயில்வே குறித்த அறிவிப்புகள் இடம் பெறவே இல்லை. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஒரு நிமிடம் கூட தமிழ்நாடு என கூறவே இல்லை என்பதை வேதனையை தருகிறது. ரயில் உபயோகிப்பாளர்கள் நிறைய எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். ஆனால் இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரியவே இல்லை. பாஜ அரசு ரயில்வே துறையை மறந்து விட்டது என ரயில் பயணிகள் நினைக்கின்றனர்.
The post பட்ஜெட்டில் பிற மாநிலங்களுக்கு அதிக நிதி விவசாயிகளை ஏமாற்றிய ஒன்றிய அரசு appeared first on Dinakaran.