மதுராந்தகம்: விவசாயிகள் பயன்பெறும் வகையில் மக்காச்சோளம் சாகுபடி சிறப்பு திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விரிவுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மக்காச்சோளம் பயிரிடுவதன் அவசியத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு சிறப்பு திட்டம் ஒன்றை சட்டசபையில் அறிவித்தார். அதன்படி சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், திருச்சி, அரியலூர், தர்மபுரி, மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்வதற்கான சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கென ₹30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான மக்காச்சோள விதைகள், திரவ மற்றும் திட உயிர் உரங்கள், அடங்கிய ₹6000 மதிப்பிலான பொருட்கள் ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதனால், மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் நல்ல பலன் பெறுவார்கள். மேலும், மக்காச்சோளம் உற்பத்தியும் அதிகரிக்கும். இந்நிலையில், இந்த திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலரான கிணார் கிராமத்தை சேர்ந்த விவசாயி டி.சுதாகர் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கிணற்று பாசனம், ஆற்று பாசனம், ஏரி பாசனம் உள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலும் நெல், கரும்பு, வேர்க்கடலை போன்றவை பயிரிடப்படுகிறது.
அதே நேரத்தில் தண்ணீர் வசதி குறைவாக உள்ள புஞ்சை நிலங்களிலும் விவசாயிகள் கேழ்வரகு, உளுந்து, எள் போன்ற தானிய பயிர்களை விளைவித்து வருகின்றனர். இதுபோன்ற நிலங்களில் மக்காச்சோளத்தையும் பயிர் செய்ய முடியும். எனவே மக்காச்சோளம் விவசாய சிறப்பு திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விரிவு படுத்த வேண்டும். அவர்களுக்கும் அரசு இலவசமாக வழங்கும் ₹6000 மதிப்பிலான மக்காச்சோளம் விதைகள், உரங்கள் கிடைக்கப்பெற்றால் குறைவான தண்ணீரைக் கொண்டு அவர்கள் இந்த பயிரை செய்து லாபம் ஈட்ட முடியும். இதன் மூலம் மக்காச்சோள உற்பத்தியும் அதிகரிக்கும். அதன் வாயிலாக பல்வேறு தொழில்கள் மேம்படும். குறிப்பாக மக்காச்சோளத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கிய உணவுகள், கால்நடை தீவனங்கள் போன்றவற்றை தயாரிக்கும் சிறு தொழில்கள் மேம்படும்.
எனவே, இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறை அமைச்சரும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்காச்சோள விவசாய சிறப்பு திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும், என்றார்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி சிறப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.