திருவாரூர், ஜூலை 24: பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலை விழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவரை வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டினர். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அரசின் பள்ளி கல்வித்துறையில் மாணவர்களுக்கு பாடம் மட்டுமின்றி கலை சார்ந்த பயிற்சிகள் மற்றும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கலை பண்பாடு மற்றும் விளையாட்டு வார விழா போட்டியில் திருவாரூர் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் 4ம் வகுப்பு மாணவர் முகிலன் என்பவர் பல குரல் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
மாணவரை திருவாரூர் வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோவன் மற்றும் செல்வம் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சாந்தி ஆகியோர் நேரில் அழைத்து மாணவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்திபாலாவிற்கும் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் மாணவருக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு செழியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
The post பள்ளி கல்வித்துறை கலை விழாவில் மாநில அளவில் அரசு பள்ளி மாணவர் முதலிடம் appeared first on Dinakaran.