பாஜகவின் படுதோல்விக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் முக்கியமாக அமைந்தது. இம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 33 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் பெற முடிந்தது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் உள்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளதால், இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக பெறுமா? என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 3 இடங்கள் சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாகவும், 3 இடங்கள் பாஜகவின் கோட்டையாகவும் உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக மாநில கட்சித் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அப்னா தளம் தலைவரும், ஒன்றிய இணை அமைச்சருமான அனுப்ரியா படேல் முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே கன்வார் யாத்திரை பாதையில் அமைந்துள்ள உணவகங்களின் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று யோகி அரசு உத்தரவிட்டது. இவ்விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மாநில அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனவே வரும் 25, 26ம் தேதிகளில் நடக்கும் பாஜக உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர், பல மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post மக்களவை தேர்தல் பின்னடைவு குறித்து விவாதிக்க 25, 26ம் தேதியில் பாஜக உயர்நிலை குழு கூட்டம்: ராஜினாமா மனநிலையில் உ.பி உட்பட பல மாநில தலைவர்கள் appeared first on Dinakaran.