ஆண்டிபட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

*நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

ஆண்டிபட்டி/உத்தமபாளையம் : ஆண்டிபட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
உத்தமபாளையம் உபகோட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை தூய்மைப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலை துறை உபகோட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், குச்சனூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் அடங்குகின்றன.

இதில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பருவ மழை பெய்யும் போது அதிகமான அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதேபோல், பல்வேறு இடங்களில் பெய்யக்கூடிய மழையினால், வரக்கூடிய வெள்ளம் பெரும் பாதிப்புகளை உண்டாக்கும்: வெள்ள காலங்களில் வரக்கூடிய தண்ணீர் தங்கு தடை இல்லாமல் போக்குவரத்து பாலத்தின் வழியே செல்வதற்கு ஏதுவாக பல்வேறு முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி உத்தமபாளையம் உபகோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊர்களிலும், முல்லையாறு பாயும் போக்குவரத்து பாலங்கள், கால்வாய் பாலங்கள், மற்றும் வாய்க்கால்கள், கண்மாய்களின் கீழ்புறம் செல்லக்கூடிய போக்குவரத்து பாலங்கள், மேம்பாலங்கள் போன்றவற்றில் இடையூறாக உள்ள மரக் கிளைகள், செடிகள், பாலங்களுக்கு கீழ்புறம் உள்ள அடைப்புகள், மற்றும் பாலங்களின் மேல்புறம் மழைநீர் செல்ல வசதியாக இருக்கக்கூடிய ஓட்டைகளில் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு கழிவுகள் போன்றவற்றை அகற்றி வரப்படுகிறது. மழை தண்ணீர் தடையில்லாமல் செல்வதற்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மாநில நெடுஞ்சாலையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி போக்குவரத்து பாலங்களில் வர்ணங்கள் பூசப்பட்டும் அவை மிகவும் சுத்தமாகவும் இரவு நேரங்களில் மினிரும் வகையில், கருப்பு – வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. இதேபோல் போக்குவரத்து பாலங்களில் வாகனங்கள் எவ்வித தடையும் இல்லாமல் செல்வதற்கு எதுவாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் வைரகுமார் சாலை ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் இப்பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டனர். உத்தமபாளையம் முல்லையாற்று பாலத்தில் வடகிழக்கு பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்ளும், வகையில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை காலங்களில் பயணம் செய்யும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் தடையில்லாமல் செல்ல வசதியாக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன்படி, போக்குவரத்து பாலங்கள், ஆற்றுப்பாலங்கள் போன்றவை தூய்மைபடுத்தப்படுவதுடன், வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிரமம் தரக்கூடிய மரக்கிளைகள், செடிகள் அகற்றப்படுகிறது. வர்ணங்கள் பூசப்பட்டு, ஒளிரும் விளக்குகள் சிகப்பு நிறத்தில் மிளிர்கின்றன. போக்குவரத்து பாலங்களுக்கு கீழ் மழைக்காலங்களில் தடையில்லாமல் வெள்ளநீர் செல்ல பாலங்களில் இடையூறாக உள்ள செடிகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெறும்’’என்றனர்.

இதே போல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நெடுஞ்சாலை உட்கோட்டத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை சார்ந்த மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தேனி நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சுவாமிநாதன் உத்தரவுப்படி, தேவதானப்பட்டி-வருசநாடு சாலை வைகை அணையில் உள்ள பெரிய பாலத்தில் பாலத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் குழாயில் உள்ளே உள்ள மண்ணை அகற்றுதல், பாலத்தின் மேல் பகுதியில் படிந்துள்ள மண்ணை அகற்றுதல் மற்றும் சிறு செடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆண்டிபட்டி-ஜெயமங்கலம் சாலையில் அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி பாலத்தில் முட்புதர்களை அகற்றும் பணி, சாலை போக்குவரத்து பார்வையை மறைக்கும் படி உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணி மற்றும் அனைத்து சாலைகளிலும் உள்ள முட்புதர்களை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தப்பணிகளை ஆண்டிபட்டி உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவி பொறியாளர் முருகேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தும் படி அறிவுறுத்தினர். சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளை சாலை ஆய்வாளர்கள் மேற்பார்வையில் சாலை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேனி கோட்டத்தில் உள்ள மற்ற நான்கு உட்கோட்டத்திலும் சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆண்டிபட்டி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: