நாகர்கோவில் :ஆட்டிசம், மூளை திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, வண்ண, வண்ண லேசர் லைட் வசதியுடன் திறன் அறியும் சிகிச்சை மையம், குமரி மருத்துவக்கல்லூரியில் திறக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் பிறவி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை பருவ நோய்கள், வளர்ச்சி தாமதங்கள் மற்றும் குறைபாடுகளுடைய குழந்தைகள் சிகிச்சை பெறுகிறார்கள். பச்சிளம் முதல் 18 வயது வரையிலான குழந்தைகள், சிறார்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு தற்போது முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், E2 லட்சம் செலவில் உணர்வு திறன் அறிந்து கொள்ளும் பிரத்யேக அறை (டார்க் நைட் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் உணர்வு திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள், மூளை திறன் செயல்பாடு குறைந்த குழந்தைகள் இந்த உணர்வு திறன் மையத்தில் சிகிச்சை பெற உள்ளனர். இந்த சிகிச்சை பிரிவை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் நேற்று திறந்து வைத்தார். உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் டாக்டர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோள், குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் அருண் பிரசாத், குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சுப சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது :ஆட்டிசம் குறைபாடு, செவி திறன் குறைபாடு, மூளை திறன் செயல்பாடு குறைபாடு கொண்ட குழந்தைகள் பராமரிப்பு மையமாக தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் இயங்குகிறது. தற்போது 40க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். இங்கு ஒரு குழந்தை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர், பிஸியோ தெரபி, சிறப்பு கல்வியாளர், மன நல ஆலோசகர், பேச்சு பயிற்சி மற்றும் காது கேளும் திறன் சோதிப்பாளர், கண் பரிசோதனையாளர், ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் உள்பட மொத்தம் 12 பேர் பணியாற்றுகிறார்கள்.
தற்போது முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஆட்டிசம் குறைபாடு, கற்றலில் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் உணர்வு திறன் அறை அமைக்கப்பட்டுள்ளது. லேசர் லைட், இசை கருவிகள், உணர்வை கட்டுப்படுத்தி உணரும் தன்மைக்கான மிதியடிகள், சம நிலை பேணுதல், மனதை ஒருமுகப்படுத்தி அச்சத்தை போக்கும் வகையிலான பயிற்சிகளுக்கான உபகரணங்கள், தொடு திறனை உணரும் தன்மை கொண்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவை உள்ளன.
பொதுவாக குழந்தைகளுக்கு 2 வயது வரை 70 சதவீதம் மூளை திறன் வளர்ச்சி அடைகிறது. 5 வயதுக்குள் 90 சதவீதம் வளர்ந்து விடுகிறது. எனவே மூளை திறன் செயல்பாட்டில் குறைகளை தொடக்க நிலையில் கண்டறிய வேண்டும். பொதுவாக ஒரு குழந்தைக்கு 5 மாதத்தில் தலை நிற்க வேண்டும். 6 மாதத்தில் கவிழ்ந்து படுக்க வேண்டும். 1 வயதுக்குள் எழுந்து நடக்க தொடங்கி விட வேண்டும்.
5 மாத குழந்தை உறங்கும் போது திடீரென சத்தம் கேட்டு கண்ணை சிமிட்ட வேண்டும். அல்லது உடலை உதற வேண்டும். அப்போது குழந்தைக்கு செவி திறன், உணர்வு திறன் என்பதை கண்டு கொள்ளலாம். தொடக்க நிலையில் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். தாமதமாகி வயது அதிகரித்தால் அதற்கான சிகிச்சைகளும் தாமதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post குமரி மருத்துவக்கல்லூரியில் வண்ண, வண்ண லேசர் லைட் வசதியுடன் உணர்வு திறன் அறியும் மையம் திறப்பு appeared first on Dinakaran.