சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தற்போது அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது. இதன் சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் எனவும், 100 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் மூன்று டெர்மினல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டது.
டிட்கோ நிறுவனம் 2023ல் பரந்தூர் விமான நிலையத்திற்கு தள அனுமதிக்கான விண்ணப்பத்தை அனுப்பியது. மேலும், தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்தது. டிசம்பர் 2023 இல், பாதுகாப்பு அமைச்சகத்தால் தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது.
சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலைய அமைவிடத்திற்கு அனுமதி வழங்கி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதனையடுத்து பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.