மதுரை, ஜூலை 23: மதுரை மாநகரில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தென் தமிழகத்தின் நுழைவாயிலான மதுரையில், தொழில் வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து அதிக அளவில் குடியேறுபவர்களால், மாநகராட்சியை ஒட்டிய ஊரக பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்டவற்றை மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
இதற்கிடையே மதுரை நகரில் எச்எம்எஸ் காலனி பிரதான சாலை, தத்தனேரி அணுகு சாலை, வைகை வடகரை மற்றும் தென் கரை சாலைகள், புது ஜெயில் ரோடு உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மணல் புழுதி தேங்கியுள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் பலத்த காற்று வீசும்போது, சாலையில் தேங்கியுள்ள தூசி பறப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இதுபோன்ற சாலைகளில் தேங்கி கிடக்கும் மணல் புழுதியை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post மதுரை மாநகரில் ஆடிக்காற்று எதிரொலியாக புழுதி பறக்கும் சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.