வங்கதேசத்தில் இருந்து 2வது நாளாக 82 மாணவ, மாணவிகள் சென்னை வந்தனர்: சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: வங்கதேசத்தில் இருந்து, 2வது நாளாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 மாணவ, மாணவிகள் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் மற்றும் கலவரம் நடந்து வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களை அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து முதற்கட்டமாக 49 தமிழக மாணவர்கள் நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தநிலையில் இரண்டாவது நாளாக நேற்று 4 நான்கு விமானங்களில் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த 82 மாணவ, மாணவிகள் கொல்கத்தா, கவுகாத்தி, அகர்தலா விமான நிலையங்களில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கதேசத்தில் படிக்கச் சென்ற மாணவர்கள் முதலமைச்சர் உத்தரவின்பேரில் அழைத்து வரப்பட்டுள்ளனர். கலவரம், போராட்டம் காரணமாக அச்சத்தினால் வர விரும்பும் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் கல்வி தடைப்பட்டு வரவில்லை. போராட்டம் காரணமாக வந்துள்ளனர். வங்கதேசத்தில் இயல்பு நிலை ஏற்பட்டதும், மீண்டும் அவர்கள் படிக்க செல்லக்கூடும். மாணவர்கள் தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் சார்பில் 2 பேர் உள்ளனர். டாக்காவில் உள்ள மாணவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தூதரகம் மூலம் கல்லூரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது என்றார்.

The post வங்கதேசத்தில் இருந்து 2வது நாளாக 82 மாணவ, மாணவிகள் சென்னை வந்தனர்: சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: