சென்னை: திருச்சியை சேர்ந்தவர் ராஜா. தினந்தோறும் சாலையோரங்களில் பேப்பர்கள், பிளாஸ்டிக், அட்டைகள் உள்ளிட்டவைகளை சேகரித்து, அதை காயலான் கடையில் எடை போட்டு அதில் கிடைக்கும் மிகவும் சொற்ப வருமானத்தில் தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கிண்டி பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், அங்கு பேப்பர், பிளாஸ்டிக் சேகரித்துக்கொண்டிருந்த ராஜா உதவி கேட்டுள்ளார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, ராஜா வேலையின்றி இருந்ததும், காகிதங்களை சேகரிப்பதின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து உணவு உண்டும், சாலையிலேயே உறங்கி வந்ததும் அமைச்சருக்கு தெரியவந்தது. அவரது நிலையை அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை தனது வாகனத்திலே வீட்டிற்கு அழைத்துச்சென்றார். பின்னர் அமைச்சர் அவரை குளிக்க சொல்லி, அவருக்கு உடை மற்றும் உணவு வழங்கினார். பின்னர், ராஜாவை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் அவரை காவலாளி பணியில் சேர்த்துவிட்டார்.
The post சொந்த-பந்தம் இன்றி ஆதரவற்று தெருவில் காகிதம் பொறுக்கியவருக்கு மருத்துவமனையில் காவலாளி பணி: குளிக்க வைத்து, புத்தாடை வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி appeared first on Dinakaran.